அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்க்க வாய்ப்பே இல்லை எனறு இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.

சமீபத்தில்தான் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில், ஆணையம் எழுப்பிய கேள்விகளுக்கு ஓ.பி.எஸ். பதிலளித்தார். அப்போது, சசிகலாவிற்கு ஆதரவாக ஓ.பி.எஸ். தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சைகளை கிளப்பியது. பொதுவெளியில் மட்டுமின்றி, கட்சிக்குள்ளேயும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்தான் இன்று மதுரை விமான நிலையத்தில் இருந்து பெரியகுளம் சென்ற ஓ.பி.எஸ்., சசிகலா குறித்து எதுவும் பேசிவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். அதனால் பத்திரிகையாளர்கள் சந்திப்பையும் தவிர்த்தார். அதையும் மீறி பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை’ என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று கிளம்பிவிட்டார்.

இந்த நிலையில்தான், அதிமுக சேலம் புறநகர் மாவட்ட உட்கட்சி தேர்தலை கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி துவக்கி வைத்தார் . பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

‘‘தமிழக முதல்வரின் துபாய் பயணம் குடும்ப பயணமோ அல்லது அவர்களது முதலீட்டு பயணமா என பொதுமக்கள் இடையே சந்தேகம் எழுந்துள்ளது. அதிமுக ஆட்சியில் நான் வெளிநாடு பயணம் செல்லும்போது துறை அமைச்சர் செயலர் மட்டுமே அழைத்துச் செல்லப்பட்டனர்.

விருதுநகர் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறது. அதிமுக உட்கட்சி தேர்தல் முடிந்த பின்பு ஆளுங்கட்சியை கண்டித்து போராட்டம் நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியாகும்.

மேகதாது அணை குறித்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பை கர்நாடக அமுல்படுத்த வேண்டும். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை கர்நாடக அரசு மதித்து நடக்க வேண்டும். ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரணை நடக்கிறது. அது குறித்து தனிப்பட்ட முறையில் தனிப்பட்ட கருத்தை கூறக்கூடாது.

அ.தி.மு.க.,வில் சசிகலாவை மீண்டும் சேர்க்க வாய்ப்பில்லை. சசிகலா பற்றிய ஓ.பி.எஸ்., கருத்து தனிப்பட்டது. தனிப்பட்ட முறையில் யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. சசிகலா விவகாரத்தில் அரசியல் ரீதியாகவும், பொதுப்பிரச்னையில் தான் வேறுபாடு உள்ளது. சசிகலா குறித்து ஊடகங்களில் தான் கேள்வி கேட்கப்படுகிறது. ஏற்கனவே முடிக்கப்பட்டது. திரும்ப, திரும்ப கேட்க வேண்டாம்’’ இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal