‘முதல்வர் ஸ்டாலினின் துபாய் தனி விமான பயண செலவை தி.மு.க., தலைமை ஏற்றுக் கொண்டுள்ளது; அரசின் நிதி செலவழிக்கப்படவில்லை,’ என அ.தி.மு.க.வின் விமர்சனங்களுக்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.

முதல்வருடன் துபாய் சென்றுள்ள அவர் அங்கிருந்து அனுப்பிய அறிக்கை: முதல்வரின் துபாய் பயணம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். தகுந்த நேரத்தில் விமான வசதிகள் கிடைக்காததால் முதல்வர் பயணத்திற்கு தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.தனி விமான பயண செலவுகளை தி.மு.க., தலைமை ஏற்றுள்ளது. முதல்வரின் பயணத்திற்கு அரசின் நிதி செலவழிக்கப்படவில்லை.

முதல்வரின் இந்த பயணம் முதலீடுகளை ஈர்ப்பதற்கு மட்டுமல்ல; கடைக்கோடி தமிழகத்தில் இருந்து துபாய் சென்று, உழைத்து கொண்டிருக்கும் தமிழர்களின் வளம், வாழ்விற்கானது. உலக வர்த்தக கண்காட்சி முடியும் நேரத்தில் தமிழக அரங்கு திறக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி உள்ளனர்.கண்காட்சி துவங்கும் நேரத்தை விட முடியும் நேரத்தில் மிகப்பெரிய கூட்டம் வருகிறது.

உலகின் பல பகுதிகளில் இருந்து பலரும் தற்போது வந்துள்ளனர். எனவே இதுதான் சரியான நேரம் என்பதால் முதல்வர் இங்கு வந்துள்ளார். பழனிசாமி முதல்வராக இருந்தபோது வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது எத்தனை கோடி ரூபாய் முதலீடாக வந்தது என்பது அவருக்கே தெரியும். இதுகுறித்து நான் சட்டசபையில் பேசியுள்ளேன். ஆனால் முதல்வரின் சுற்றுப் பயணத்தால் மூன்று நாட்களில் 6000 கோடி ரூபாய் முதலீடு கிடைத்துள்ளது.

அ.தி.மு.க., ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சந்தி சிரித்தது. விருதுநகர் பாலியல் வழக்கு தொடர்பாக தெளிவான விளக்கத்தை சட்டசபையில் முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் 60 நாட்களில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது. விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி., தரப்பில் தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டிற்கே முன்னுதாரணமாக இந்த வழக்கின் தீர்ப்பு அமையும் என முதல்வர் கூறியுள்ளார்.

எனவே இந்த வழக்கு குறித்து தேவையற்ற கருத்துக்களை பழனிசாமி தெரிவிக்க வேண்டாம். முதல்வருக்கு கிடைக்கும் புகழ், வரவேற்பை பொறுத்து கொள்ள முடியாமல், பழனிசாமி புழுதியை இறைத்து கொண்டிருக்கிறார். இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal