இந்தியாவில் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாகவும், உலகளவில் இந்திய பொருட்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா கடந்த வாரம் 400 பில்லியன் டாலர்(30 லட்சம் கோடி ரூபாய்) அளவுக்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது. ஒரு காலத்தில் 100 பில்லியன் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. சில நேரம் 150 பில்லியன், 200 பில்லியன் என மாறியது தற்போது 400 பில்லியன் என்ற அளவுக்கு உயர்ந்தது.

நாட்டின் அனைத்து பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் வெளிநாடுகளை சென்றடைந்துள்ளன. அசாமில் இருந்து லெதர் பொருட்கள், ஓஸ்மானாபாத்தில் இருந்து கைவினை பொருட்கள், பிஜாபூரில் இருந்து பழங்கள் மற்றும் காய்கறிகள், சந்தவுலியில் இருந்து கருப்பு அரிசி ஆகியவற்றின் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும், வாழைப்பழங்கள் சவுதி யில் கிடைக்கிறது. ஆந்திராவில் இருந்து மாம்பலங்கள் தென்கொரியாவுக்கும், திரிபுராவில் உற்பத்தியாகும் பலாப்பழங்கள் லண்டனுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

வெளிநாடுகளில் இந்திய பொருட்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. புதிய பொருட்களின் தயாரிப்புகள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. முன்பை விட தற்போது, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் வெளிநாடுகளில் அதிகளவில் காண முடியும்.ஒவ்வொரு இந்தியனும் உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு கொடுக்கும்போது, உள்ளூர் பொருட்கள் உலகை எட்டுவதற்கு வெகு நேரமாகாது.

ஒரு காலத்தில் பெரிய நிறுவனங்களை அரசுக்கு பொருட்களை விற்று வந்தன. தற்போது, பழைய முறை மாறி வருகிறது. சிறிய கடைக்காரர்கள், தங்களிடம் உள்ள பொருட்களை அரசிடம் விற்க முடியம். இது தான் புதிய இந்தியா. நாடு முழுவதும் உள்ள 1.25 லட்சம் சிறிய தொழில்முனைவோர், தங்களிடம் உள்ள பொருட்களை அரசிடம் விற்றுள்ளனர்.

நமது பாரம்பரியத்தில் ஒவ்வொருவரும் நூறாண்டு வாழ விரும்புகின்றனர். தூய்மையுடன் ஆரோக்கியம் நேரடியாக தொடர்பு பெற்றுள்ளது. 126 வயதில் பத்ம விருது பெற்ற பாபா சிவானந்த்தின் உடல் ஆரோக்கியம் குறித்து அனைவரும் விவாதித்து வருகின்றனர். அவரின் வாழ்க்கை, அனைவருக்கும் முன்மாதிரி, அவர் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன். யோகா மீது ஆர்வம் கொண்டுள்ள அவர், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொண்டுள்ளார்.

சென்னையை சேர்ந்த அருண் கிருஷ்ணமூர்த்தி, தான் வசிக்கும் பகுதியில், குளங்கள் மற்றும் ஏரியை தூய்மைபடுத்துவதற்கு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். 150க்கும் மேற்பட்ட ஏரி மற்றும் குளங்களை தூய்மைபடுத்தும் பணியை பொறுப்பாக எடுத்து கொண்டு அதனை வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளார். இவ்வாறு பிரதமர் பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal