கடந்த 2009-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களின் முன்னெடுப்பில் ஜனவரி மாதம் பொங்கல் தினத்தை முன்னிட்டு நாட்டுப்புற கலைஞர்களை ஊக்குவிக்கும் வண்ணமாக சென்னை சங்கமம் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி மூலமாக பல்வேறு நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வில் வெளிச்சம்‌ கிடைத்தது என்றால் அது மிகையாகாது. இப்போது சினிமாவில் நாட்டுப்புற பாடல்கள் பாடி வரும் பல பாடகர்கள் சென்னை சங்கமம் நிகழ்ச்சி மூலமாக வெளியே வந்தவர்கள் தான்.

ஆனால், அடுத்து வந்த அதிமுக ஆட்சியினால் இந்த‌ சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்த முடியாமல் போனது. மீண்டும் இப்போது திமுக ஆட்சி‌ அமைந்ததும் சென்னை சங்கமம் நிகழ்ச்சியை மீண்டும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து பல்வேறு தரப்பினரிடம் இருந்து எழுந்து வந்தது. ஆனால் தமிழக அரசு சென்னை சங்கமம் என்ற நிகழ்ச்சியை நம்ம ஊரு திருவிழா என்ற தலைப்பில் கலை பண்பாட்டுத் துறை மற்றும் சுற்றுலாத்துறை மூலமாக சென்னை தீவுத்திடலில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று (22/03/2022) நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு போதிய மக்கள் வரவேற்பு இல்லாதது தான் இதை முன்னின்று நடத்திய அமைச்சர்களுக்கும், தமிழக அரசுக்கும் அதிருப்தியை தந்திருக்கிறது!

நாட்டுப்புற கலைகளை நகரத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது தான் இந்நிகழ்வின் நோக்கம். ஆனால், நம்ம ஊர் திருவிழாவில் கிராமியப் பாடல்களை பாடாமல் சினிமா பாடல்களையே பாடியது காண வந்த‌ மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. ஒரு நிகழ்ச்சி கூட முறையாக ஒத்திகை பார்க்காமல் நேரடியாக மேடையில் வந்து நிகழ்த்தி காட்டியது இந்நிகழ்ச்சி அவசர கதியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி என்பது அப்பட்டமாக தெரிந்தது. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் வெறும் 3 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால், தொகுப்பாளர்களோ 10 நிமிடங்களுக்கு மேலாக தொடர்ந்து பேசியது மக்களை மேலும் கோபத்திற்கு உள்ளாக்கியது. அமைச்சர்கள் பேசி முடித்த பின்னர் 7.30 மணியில் இருந்து ஆரம்பித்த நிகழ்ச்சி 9.30 மணி வரையிலும் வெறும் 4 நிகழ்ச்சி மட்டுமே நடத்தப்பட்டது. அந்த 4 நிகழ்ச்சியும் தலா 4 நிமிடங்கள் மட்டுமே நடத்தப்பட்டது. மீதி நேரம் முழுவதும் தொகுப்பாளர்களே தொடர்ந்து பேசி வந்தனர்.

அதிலும் மைக் மற்றும் ஒலி & ஒளி ஏற்பாடுகள் அனைத்தும் மிக மோசமாக இருந்தது. மைக்கை ஒழுங்கு படுத்தவே பல நிமிடங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால், மேடை அமைப்பு மட்டும் மிக பிரமாண்டமாக இருந்தது அதற்கு காரணம் சமீபத்தில் நடைபெற்ற இசைஞானி இளையராஜா அவர்கள் நடத்திய நிகழ்ச்சியின்‌ மேடையை அப்படியே இந்நிகழ்ச்சிக்கும் பயன்படுத்தியது தான். இந்நிகழ்ச்சியை விடுமுறை நாட்களில் நடத்தி இருந்தால் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் கூடியிருக்கும். ஆனால், திங்கள்கிழமை நடத்தப்பட்டதால் கூட்டத்தை கூட்டுவதற்காக பள்ளி, கல்லூரி மாணவர்களை கூட்டம் கூட்டமாக அழைத்து வந்திருந்தனர். இரவு 12.30 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்லூரி மாணவர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறிய பின்னர் இரவு 9 மணிக்கெல்லாம் மொத்த‌ மைதானமும் காலியாக காலி சேர்களாகவே காணப்பட்டது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களுக்கு அழைப்பு கொடுத்து, பத்திரிகையில் பெயர் போட்டிருந்தாலும் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மதிவேத்தன், பி.கே.சேகர்பாபு, செஞ்சி மஸ்தான் மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் ஆகியோர் கலந்துகொண்டாலும் அமைச்சர் மதிவேந்தன் மட்டுமே கடைசி வரை நிகழ்ச்சியில் இருந்தார். இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த முக்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு பாதியில் சென்றதே இந்நிகழ்ச்சி ஒரு சம்பிரதாயத்திற்காக நடத்திய நிகழ்ச்சி என்பது அங்கிருந்தவர்கள் புரிந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்காக அழைத்து வரப்பட்ட நாட்டுப்புற கலைஞர்களுக்கு ஒரு நாளுக்கு ரூபாய் 2000 வீதம் 3 நாளைக்கு 6000 ரூபாயும், பயண செலவுகளுக்காக ரூபாய் 1000 மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. இப்படி பல குழப்பங்களுடன், அரைகுறை ஏற்பாடுகளுடன் நடைபெற்ற நிகழ்ச்சியால் கிராமிய கலைகளை காணலாம் என்ற ஆர்வத்தில் வந்த கொஞ்ச எண்ணிக்கை மக்களுக்கும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal