ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலாவின் குடும்பத்திற்கு ஆதரவாக ஓ-.பி.எஸ். வாக்குமூலம் அளித்திருப்பதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் 2-வது நாளாக இன்று ஆஜரானார்.

விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை நடத்தியது. அப்போது ஓ. பன்னீர்செல்வம் அளித்த பதிலில் கூறியதாவது, ‘‘ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ, அவரது குடும்பத்தினரோ எந்தவிதமான சதித்திட்டமும் தீட்டவில்லை.

ஜெயலலிதா குற்றவாளி என கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பு கூறியபோது, என்னை அழைத்து எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்ட சொன்னார் ஜெயலலிதா. பாதுகாவலர் வீரப்பெருமாள் மூலம் நத்தம் விஸ்வநாதனை அழைத்து, ஓ.பன்னீர்செல்வம் தான் முதல்வர் என ஜெயலலிதா கூறினார்.

மிகுந்த துயரத்துடன் அழுது கொண்டிருந்தபோது, என்னிடம் அழாதே பன்னீர், இந்த நேரத்தில் நீ தைரியமாக இருக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறினார்’’ என வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆரம்பகால கட்டத்தில், ‘ஜெயலலிதா மரணத்தில் மர்மம் விலகவேண்டும்’ என்று முதலில் போர்க்கொடி தூக்கிய ஓ.பி.எஸ்., சசிகலா குடும்பத்தினர் எந்தவித சதித்திட்டமும் தீட்டவில்லை என்று கூறியிருப்பதுதான் அ.தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal