ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ‘இனி தோல்விக்கான காரணத்தை ஆராயப் போவதாக, அக்கட்சியின் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதுபோல் உள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா கூறியதாவது, ‘‘ எங்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக 5 மாநில தேர்தல் முடிவுகள் வந்துள்ளன. ஆனால், அதனை ஏற்று கொள்கிறோம். நாங்கள் மக்களின் ஆசியை பெற தவறிவிட்டோம். தேர்தல் முடிவுகள் குறித்து ஆராய விரைவில் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தை கூட்ட சோனியா முடிவு செய்துள்ளார். பஞ்சாபில், அம்மாநில மண்ணின் மைந்தன் சரண்ஜித் சிங் சன்னி மூலம் புதிய தலைமையை அளித்தோம். ஆனால், அதற்கு முந்தைய அமரீந்தர் சிங்கின் 4.5 ஆண்ட ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பு நிலையில் இருந்து எங்களால் வெளியே வர முடியவில்லை. இதனால், ஓட்டு மூலம் மக்கள் ஆம் ஆத்மியை தேர்வு செய்துள்ளனர்’’ என்றார்.

உத்தரகண்ட் முதல்வர் வேட்பாளர் ஹரீஸ் ராவத் கூறுகையில், ‘‘பொது மக்கள் மனங்களை வெல்ல எங்களது முயற்சிகள் குறைவாகவே இருந்தன. மக்கள் மாற்றத்திற்கு ஓட்டு போடுவார்கள் என்பதில் உறுதியாக இருந்தோம். எங்களின் முயற்சியில் குறை இருந்திருக்க வேண்டும். எதை ஏற்று கொண்டு தோல்விக்கு பொறுப்பேற்கிறேன். பிரசார திட்டமிடல் போதுமானதாக இல்லை. பிரசார குழு தலைவர் என்ற முறையில் அதற்கு பொறுப்பு ஏற்கிறேன். தொண்டர்கள் சிறப்பாக பணியாற்றினர். அதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மக்களின் நம்பிக்கையை என்னால் பெற முடியவில்லை. ஆனால், எனது மகளையும், வெற்றி பெற்றவர்களுக்கும் பாராட்டு தெரிவிக்க விரும்புகிறேன். என்னை பொறுத்த வரை முடிவுகள் ஆச்சர்யமளிப்பதாக உள்ளது. பணவீக்கம் அதிகமாக இருந்த போதும், மக்களின் முடிவு என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. மக்களின் முடிவு இது தான் என்றால், பொது நலன் மற்றும் சமூக நீதிக்கான விளக்கம் என்ன. இந்த முடிவுக்கு பிறகும், பா.ஜ.,ஜிந்தாபாத்’ என்ற கோஷத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை’’ என்றார் சோகமாக!

கோவா பொறுப்பாளரும் முன்னாள் நிதியமைச்சருமான சிதம்பரம் கூறும்போது, ‘‘கோவா மக்களின் முடிவுகளை ஏற்று கொள்கிறோம். பல தடைகளை தாண்டி எங்களது வேட்பாளர்கள் தைரியமாக போட்டியிட்டனர். பா.ஜ.க, ஆட்சியமைக்க மக்கள் ஓட்டு போட்டனர். இதனை ஏற்று கொள்கிறோம். பல தொகுதிகளில் குறைந்தளவு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்து உள்ளோம். பல கட்சிகள் இடையே ஓட்டுகள் பிரிந்தது, எங்களின் எதிர்பார்ப்புகள் குறைய காரணமாகியது. 33 சதவீத ஓட்டுகள் மட்டும் தான் பா.ஜ.,விற்கு கிடைத்தது. மற்ற ஓட்டுகள் பிரிந்தன’’ இவ்வாறு அவர் கூறினார்.

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்..? இனியாவது, தவறுகளை திருத்திக்கொண்டு தீவிரமாக களப்பணியாற்றுவார்களா காங்கிரஸ் தலைவர்கள்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal