கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.விற்கு பிரசாந்த் கிஷோரும், அ.தி.மு.க.விற்கு சுனிலும் தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுத்தனர்.

சட்டமன்றத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் வியூகம் வகுத்துக்கொடுத்தவர்களுக்கு கோடிகளை வாரி வழங்கியது திராவிடக் கட்சிகள். இந்த நிலையில்தான் அ.தி.மு.க.விற்கு வியூகம் வகுத்துகொடுத்த சுனில் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமாகிவிட்டார்.

தி.மு.க., வியூக வகுப்பாளராக செயல்பட்ட பிரஷாந்த் கிஷோர், தேர்தல் வெற்றிக்குப் பின் பணி முடிந்து கிளம்பினார். இதற்காக அவருக்கு, 360 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு, தி.மு.க.,வால் கொடுக்கப்பட்டது.

அதன்பின், அவர் வகுத்து கொடுத்த வியூகங்கள் அடிப்படையில், முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசனின் சகோதரி நிறுவனமான, ‘பென்’ வியூக வகுப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தது. அந்நிறுவனத்தால், பிரஷாந்த் கிஷோரின், ‘ஐபேக்’ நிறுவனம் போல செயல்பட முடியவில்லை. இதையடுத்து, வரும் 2026 சட்டசபை தேர்தலுக்காக, மீண்டும் பிரஷாந்த் கிஷோரை நியமிக்க முடிவெடுத்துள்ளனர்.

இதற்காக, டில்லியில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்த பிரஷாந்த் கிஷோர், முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவருடைய மருமகன் சபரீசனை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இதுகுறித்து, அறிவாலய வட்டாரத்தில் பேசியபோது, ‘‘கடந்த, 2014 லோக்சபா தேர்தலுக்குப் பின், தி.மு.க.,வும் மற்ற கட்சிகளைப் போல வியூகம் வகுத்து, தேர்தலை சந்திக்கும் முனைப்பில் களம் இறங்கியது. அதையடுத்து, பிரஷாந்த் கிஷோர் டீமில் பணியாற்றிய கர்நாடகாவைச் சேர்ந்த சுனில் கனுக்கோலு என்பவரை நியமித்தது. அதன்பின், 2016 சட்டசபை தேர்தலின் போதும், தி.மு.க.,வுக்காக வியூகம் வகுத்துக் கொடுத்தவர் சுனில் கனுக்கோலு தான். அவருடைய வியூகம் பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும், பெரும் தோல்வி என்று சொல்ல முடியாத நிலையில் இருந்தது.

இந்நிலையில், மாநில கட்சிகளுக்கு வெற்றி வியூகம் வகுத்து கொடுத்த பிரஷாந்த் கிஷோர் மீது, தி.மு.க.,வுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், வன்னியர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு கொடுப்போம் என்ற அறிவிப்பு வெளியிடும் வியூகத்தை, தி.மு.க.,வுக்கு சுனில் வகுத்துக் கொடுத்தார். அது, பெரும் தோல்வியில் முடிந்தது.

இதனால், 2021 தேர்தலுக்கு சுனிலை கழற்றி விட்டு, பிரஷாந்த் கிஷோரை நியமித்துக் கொள்ளும் முடிவுக்கு தி.மு.க., வந்தது. பிரஷாந்த் கிஷோரிடம்,ஸ்டாலின் மருமகன் சபரீசன் பேசி, அதற்கான ஒப்பந்தம் போட வைத்தார். பிரஷாந்த் கிஷோர் நிறுவனம் கொடுத்த அனைத்து ஆலோசனைகளையும், தி.மு.க., நிர்வாகிகளும், பிரமுகர்களும் களத்தில் செய்து முடித்தனர்.

இதையடுத்து, 2021 சட்டசபை தேர்தலில், வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் ஐபேக் நிறுவனம் முன்னின்று செய்ய, தி.மு.க., மட்டும், 135 இடங்களில் வெற்றி பெற்று, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. கூட்டணி கட்சியினரும் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றனர்.

அதன்பிறகு சபரீசன் சகோதரி நிறுவனம் அந்தப் பொறுப்பை ஏற்று, தி.மு.க.,வுக்கும், ஆட்சி நிர்வாகத் திட்டங்களுக்கும் வியூகம் வகுத்துக் கொடுத்தது. அது எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில், தமிழக பா.ஜ.க, தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டு, அவர் களத்தில் பா.ஜ.க,வை வளர்த்தெடுத்து இருப்பதோடு, சவாலான கட்சியாகவும் உருவாக்கிவிட்டார்.

அடுத்த சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரு ஆண்டுகளே இருக்கும் நிலையில், கட்டாய வெற்றிக்கு பிரஷாந்த் கிஷோரின் வியூக வகுப்பு தி.மு.க.,வுக்கு தேவைப்படுகிறது. அதற்காக, மீண்டும் பிரஷாந்த் கிஷோர் அழைக்கப்பட்டிருக்கிறார். பேச்சு முடிந்துள்ளது. விரைவில், அவர் தன் நிறுவன ஊழியர்களை தமிழகம் அனுப்பி, தி.மு.க.,வுக்கான வியூக வகுப்பு பணிகளை துவங்கவிருக்கிறார்’’ என்றனர்.

வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தி.மு.க. ஆயத்தமாகி வரும் நிலையில், அ.தி.மு.க.வோ நாடாளுமன்றத் தேர்தலில் எத்தனை சீட் பெறுவோம்… இரண்டாவது இடத்திற்கு வருவோமா? அல்லது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படுவோமா? என்ற கவலையில் இருக்கிறதாம்.

இதற்கிடையே அ.தி.மு.க.வோ முழுக்க முழுக்க சவுக்கு சங்கரை நம்பியிருந்த நிலையில், அவரும் சிறைவாசம் சென்றுவிட்டதால், மீண்டும் தற்போது காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சுனிலை தொடர்பு கொண்டு, அவரது டீமில் உள்ளவர்களை வைத்து தேர்தல் வியூகம் வகுக்கலாமா என்ற யோசனையில் இறங்கியிருக்கிறதாம் எடப்பாடியார் டீம்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal