பல ஆடம்பர வசதிகள் நிறைந்த பிரத்யேகமான தனி விமானத்தில் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன், தேர்தல் முடிந்தவுடன் குடும்பத்துடன் லண்டனுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

ஆந்திராவில் தேர்தல் முடிந்தவுடன் அந்த மாநில முதல்வர் ஜெகன்மோகன் தனது குடும்பத்துடன் லண்டனுக்குச் சுற்றுலா சென்றுள்ளார். அதுவும் உலகிலேயே மிகப்பெரிய ஆடம்பர விமானத்தில் சொகுசாக பயணித்திருக்கிறார்.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 13ஆம்தேதி சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல் நடந்து முடிந்தது. ஜூன் 4ஆம் தேதி இவ்விரு தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் தெரியவரும். இந்நிலையில், ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன், தேர்தல் முடிந்தவுடன் குடும்பத்துடன் லண்டனுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

பல ஆடம்பர வசதிகள் நிறைந்த பிரத்யேகமான தனி விமானத்தில் அவர் புறப்பட்டுச் சென்றுள்ளார். இதற்காக சனிக்கிழமை தாடேப்பள்ளியில் உள்ள வீட்டில் இருந்து காரில் கன்னவரம் விமான நிலையம் வந்த ஜெகன்மோகன் இரவு சுமார் 11 மணிக்கு குடும்பத்துடன் தனி விமானத்தில் லண்டனுக்குப் புறப்பட்டார். மே 31ஆம் தேதிதான் ஆந்திரா திரும்புவார் என்று கூறப்படுகிறது.

முதல்வரின் பயணத்தை முன்னிட்டு அவரது பாதுகாப்புக்காக 4 அதிகாரிகள் முன்கூட்டியே லண்டன் சென்றுள்ளனர். ஜெகனின் பாதுகாப்புப் பணியாளர்களின் செலவை அரசே ஏற்கிறது. ஆனால், ஜெகன் தன் குடும்பத்துடன் தனி விமானத்தில் பயணம் செய்வதால், அதற்கான மொத்த செலவுகளும் அவருடைய தனிப்பட்ட செலவாக இருக்கும்.

ஜெகன் லண்டன் சென்றடைந்ததும் அங்கு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆதரவாளர்கள் அவருக்கு சிறப்பாக வரவேற்பு அளித்தனர். ஜெகன் விமானத்தில் இருந்த இறங்கும் காட்சியும் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்கும் காட்சியும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

சி.பி.ஐ. வழக்கில் ஜாமீனில் உள்ள முதல்வர் ஜெகன்மோகன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுவர சி.பி.ஐ. நீதிமன்றத்தில் அனுமதி பெற்றார். அதன்படி, 31ஆம் தேதி வரை அவர் வெளிநாட்டுக்குச் செல்ல அனுமதி கிடைத்தது.

முதல்வரின் லண்டன் பயணத்திற்காக உலகிலேயே மிகவும் ஆடம்பரமான விஸ்டா ஜெட் நிறுவனத்தின் பாம்பார்டியர் 7500 ரக விமானம் வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்தது. இந்த விமானத்தில் 14 இருக்கைகள் தவிர படுக்கை வசதியும் உள்ளது. இந்த விமானத்தை பயன்படுத்துவதற்கு ஒரு மணிநேரத்துக்கு ரூ.12 லட்சம் வாடகை வசூலிக்கப்படுகிறது.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் தேர்தல் முடிந்தவுடன் கொடைக்கானல் மற்றும் ஊட்டிக்கு குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று வந்தது நினைவுகூரத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal