உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடந்த போது அதன் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி மிக உறுதியாக காங்கிரஸ் வெற்றிபெறும் என்று கூறி வந்தார். நாங்கள் கண்டிப்பாக கடுமையான போட்டியை கொடுப்போம்.இது என்னுடைய முன்னோர்களின் பூமி. நான் இந்த மண்ணை விட்டு போக மாட்டேன். இந்த தேர்தலில் உத்தர பிரதேச மக்கள் காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று பிரியங்கா காந்தி கூறி வந்தார்.அங்கு பிரியங்காவை முன்னிறுத்தி காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது.

கடந்த முறை சட்டசபை தேர்தலில் உத்தர பிரதேசத்தில் யாரை முன்னிறுத்துவது என்று தெரியாமல் காங்கிரஸ் கடைசிவரை புலம்பி, கடைசியில் படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில்தான் இந்த முறை உத்தர பிரதேசத்தில் பிரியங்கா காந்தியை காங்கிரஸ் முன்னிறுத்தியது. ஏற்கனவே லோக்சபா தேர்தலின் போது உத்தர பிரதேசத்தில் பிரியங்கா காந்தி காங்கிரசின் உபி பொதுச்செயலாளராக இருந்தார்.

ஆனால் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வெறும் 1 இடத்தை மட்டுமே வென்றது. ராகுல் காந்தியே அமேதி தொகுதியில் தோல்வி அடையும் அளவிற்குத்தான் உத்தர பிரதேசத்தில் பிரியங்கா காந்தியின் திட்டங்கள், பிளானிங் இருந்தது. இந்த நிலையில்தான் தற்போது சட்டசபை தேர்தலிலாவது காங்கிரஸ் இங்கு குறிப்பிடத்தகுந்த இடங்களை வெல்லுமா என்று கேள்விகள் நிலவி வந்தன. உத்தர பிரதேசத்தில் பிரியங்கா காந்தி குறைந்த அளவிலாவது தாக்கத்தை ஏற்படுத்துவாரா என்று கேள்வி நிலவி வந்தது.

ஆனால் உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளது. அங்கு காங்கிரஸ் 2-4 இடங்களை பெறுவதற்கு கூட திணறி வருகிறது. ராகுல் காந்தியை விட மோசமான ரிசல்ட்டை உத்தர பிரதேசத்தில் பிரியங்கா காந்தி கொடுக்கும் நிலைக்கு சென்று இருக்கிறார். அங்கு காங்கிரஸ் முன்னிலை வகிக்கும் 4 இடங்களிலும் பெரிய அளவில் முன்னிலை வகிக்கவில்லை. குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே முன்னிலை வகிக்கிறது.

கடந்த சட்டசபை தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பாஜக 303 இடங்களை வென்று ஆட்சியை பிடித்தது. அங்கு யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக கட்சி ஆட்சி புரிந்து வருகிறது. அங்கு பாஜக கூட்டணிக்கு அப்னா தளம் கட்சியின் 9 இடங்களையும் சேர்த்து 312 இடங்கள் உள்ளன. எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சிக்கு 49 இடங்கள் உள்ளன. பகுஜன் சமாஜ் பார்ட்டிக்கு 15 இடங்கள் உள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு 7 இடங்கள் உள்ளன. இந்த முறை அந்த 7 இடங்களை கூட காங்கிரஸ் வெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி மிக மோசமான தோல்வியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. அங்கு காங்கிரஸ் கட்சி கிட்டத்தட்ட காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, மொத்தம் 403 தொகுதிகளை கொண்ட உ.பி., சட்டசபைக்கு 7 கட்டங்களாக நடந்த தேர்தலில் பெரும்பான்மை பெற 202 இடங்கள் தேவை. தற்போதைய நிலையில் 255 இடங்களில் இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் 304 இடங்களில் பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்றிருந்தது. அதில் பா.ஜ., மட்டும் 297 மற்றும் கூட்டணி கட்சி 7 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைத்தாலும், கடந்த முறை பெற்ற வெற்றியை விட இடங்கள் குறைவாக கிடைத்துள்ளது. இது முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு மீது மக்கள் அதிருப்தி கொண்டுள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal