தி.மு.க. ஆட்சி அமைந்து நடந்து முடிந்த நகர்ப்புற தேர்தலிலும் வரலாறு காணாத வெற்றி பெற்றிருக்கிறது! கட்சிக்கு எதிராக உள்குத்துவேலைகளில் ஈடுபட்ட சாதாரண நிர்வாகிகள் முதல் எம்.எல்.ஏ.க்கள் மீது கூட அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறார் மு.க.ஸ்டாலின். இந்த நிலையில்தான் நகர்ப்புற தேர்தலில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அ.தி.மு.க. பல இடங்களில் வெற்றியடைந்தது தொடர்பாக உளவுத்துறை அளித்துள்ள ரிப்போர்ட்டில், அமைச்சர் ஒருவர் உறைந்து இருக்கிறாராம்!

இது பற்றி விசாரணையில் இறங்கியபோது, விருநகர் மாவட்ட வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், இவருடைய ‘பழைய பாசத்தில்’ அ.தி.மு.க.வினர் சிலர் வெற்றியடைந்ததாகவும், தனது எல்லையைத் தாண்டி தென் மாவட்டங்களிலும் மூக்கை நுழைப்பதாக உடன் பிறப்புகள் குமுறுகிறார்கள்.

தமிழகத்தில் தற்போது, அந்தந்தத்துறை அமைச்சர்கள் அவரவர் துறையைத் தவிர்த்து மற்றத்துறைகளில் மூக்கை நுழைக்காமல், ‘பதவி’யை காப்பாற்றிக்கொள்ள முயற்சித்து வரும் வேளையில், வருவாய்த்துறை அமைச்சரின் அத்து மீறல்கள் பற்றி உடன் பிறப்புக்களிடம் பேசினோம்.

‘‘கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் எனும் சாத்தூர் ராமச்சந்திரன், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள கோபாலபுரம் கிராமத்தில் 1949-ம் ஆண்டு, ஆகஸ்ட் 8-ல் பிறந்தவர். எட்டாம் வகுப்புக்கு மேல் படிப்பு வராததால், சித்தப்பாவுக்குத் துணையாக விருதுநகரில் பஞ்சு வியாபாரத்தை கவனிக்கத் தொடங்கினார் ராமச்சந்திரன். தீவிர எம்.ஜி.ஆர் ரசிகரான இவர், தனது ஊரில் ‘தங்கக் கலசம் எம்.ஜி.ஆர்.ரசிகர் மன்றம்’ என்ற அமைப்பைத் தொடங்கி, எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றச் செயலாளர் பதவிவரை உயர்ந்தார்.

முதன்முதலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். எம்.ஜி.ஆர் ஆட்சியில் கூட்டுறவு, பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை அமைச்சராகப் பதவிவகித்தார். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று கட்சி இரண்டாகப் பிரிந்தபோது, இவர் ஜெ. அணியில் இருந்தார். ஜெயலலிதாவை ஆதரித்த 32 எம்.எல்.ஏ-க்களை விருதுநகருக்குக் கொண்டுவந்து, தனது ஸ்பின்னிங் மில்லில் தங்கவைத்து பாதுகாத்ததில், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக மாறினார். பின்னர் ஜெயலலிதாவுடனான கருத்து வேறுபாட்டால், சில ஆண்டு காலம் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்த சாத்தூரார், பின்னர் திமுக-வில் இணைந்தார்.

கருணாநிதி அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராகவும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் கைத்தறித்துறை அமைச்சராகவும் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. சாத்தூர் தொகுதியில் ஆறு முறை, விளாத்திகுளத்தில் ஒரு முறை மற்றும் அருப்புக்கோட்டைத் தொகுதியில் 2016, 2021-ல் இரண்டு முறை வெற்றிபெற்று, ஒன்பது முறை எல்.எல்.ஏ-வான ராமச்சந்திரன், ஆறாவது முறையாக அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார். ஸ்டாலினின் அமைச்சரவையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை இவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான் தென் மாவட்ட அரசியல் மற்றும் பிற விஷயங்களில் மூக்கை நுழைப்பதாக உடன் பிறப்புகள் குமுறி வருகின்றனர். பழைய பாசத்தில் இன்னும் அ.தி.மு.க.வினருக்கு அதிகமாக ‘உதவிகளை’ செய்வதாகவும் புகார்களை வாசிக்கின்றனர் உடன் பிறப்புக்கள். கலைஞர் முதலமைச்சராக இருந்தபோதே ஒரு முறை (சஸ்பெண்ட் செய்யப்பட்டார்) நடவடிக்கைக்கு உள்ளானவர். இந்த நிலையில்தான் ‘பழைய பாசத்தில்’ இவரிடம் அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் தற்போது பயனடைந்து வருகிறார்களாம்.

மேலும் நகர்ப்புற தேர்தலில் இவரை பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மாவட்டங்களில், சில அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றதற்கு இவர்தான் காரணம் என உடன் பிறப்புக்களே பேசி வருகின்றனர். இது பற்றி உளவுத்துறையும் அறிக்கை கொடுத்திருக்கிறதாம். மா.செ.க்கள். எம்.எல்.ஏ.க்கள் என பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வரும் முதல்வர், வருவாய்த்துறை அமைச்சர் மீதும் விரைவில் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் உடன் பிறப்புக்கள்’’ என்றனர்.

அமைச்சர் தரப்பிலோ, ‘‘இது வெல்லாம் கட்டுக்கதை’’ என்றனர்.

நெருப்பில்லாமல் புகையாதே..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal