காங்கிரஸின் கோட்டையான பஞ்சாபில், அக்கட்சியை சுத்தமாக துடைத்தெறிந்தது துடப்பம். ஆம். ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபை கைப்பற்றப் போகிறது.

பஞ்சாபில் ஆட்சி அமைக்க 59 பெரும்பான்மை இடங்கள் தேவைப்படும் நிலையில், ஆம்ஆத்மி கட்சி 75 இடங்களுக்கு மேல் முன்னிலை வகிப்பதால், அங்கு ஆட்சியை கைப்பற்றும் நிலையை எட்டியுள்ளது. ஆளும் காங்., கட்சி 22 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளன.

பஞ்சாபில் கடந்த பிப்ரவரி 20ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்தது. இதில், காங்கிரஸ், பா.ஜ., கூட்டணி, சிரோமணி அகாலிதளம் ஆகிய கட்சிகளுடன் ஆம்ஆத்மி கட்சியும் களத்தில் குதித்தன. 20ம் தேதி நடந்த தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (மார்ச் 10) நடக்கிறது. இதில், காலை 8 மணி முதல் துவங்கிய ஓட்டு எண்ணிக்கையில் துவக்கம் முதல் ஆளும் காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி கட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வந்தது. காங்கிரஸ் தலைவர் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் நவ்ஜோத் சிங் சித்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சென்னி, தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் முன்னிலை வகித்துள்ளார். காலை 9:30 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள 117 தொகுதிகளில், ஆம்ஆத்மி கட்சி 75 இடங்களில் முன்னிலை வகித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 22 இடங்களில் மட்டுமே முன்னிலையை பெற்றது. இதனால் பெரும்பான்மைக்கு தேவையான 59 இடங்களை கடந்து ஆம்ஆத்மி முன்னிலை வகிப்பதால் பஞ்சாபில் ஆட்சியை கைப்பற்றும் நிலையில் உள்ளது. இதனையடுத்து ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் உற்சாகமடைந்துள்ளார். இதனால், ஆம்ஆத்மி கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal