காங்கிரசின் இளவரசரான ராகுல் காந்தி, இந்தியாவின் பிரதமராக வேண்டும் என பாகிஸ்தான் விரும்புகிறது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். குஜராத் மாநிலம் ஆனந்த் பகுதியில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், சில தினங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் முன்னாள் அமைச்சரான சவுத்ரி உசேன் ராகுலை புகழ்ந்து பேசியதை மனதில் வைத்து இவ்வாறு பேசியதாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி காங்கிரஸ் கட்சிக்கு பாகிஸ்தானில் ஆதரவாளர்கள் பலர் இருப்பதாகவும் மோடி பேசினார்.

இந்தியாவில் காங்கிரஸ் அழிவதாக பேசிய மோடி, அதற்காக பாகிஸ்தானில் சிலர் அழுவதாக கூறினார். பாகிஸ்தான் தலைவர்கள் காங்கிரசின் வெற்றிக்காக பிரார்த்திப்பதாகவும் அவர் பிரச்சாரம் செய்தார். காங்கிரசுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவு தற்போது முழுமையாக அம்பலம் ஆகிவிட்டதாக மோடி தெரிவித்தார்.

இண்டியா கூட்டணி இஸ்லாமியர்களை வாக்கு ஜிஹாத் நடத்த கேட்கிறது என விமர்சித்த மோடி, லவ் ஜிஹாத், நில ஜிஹாத்-ஐ தொடர்ந்து, இப்போது வாக்கு ஜிஹாத் தொடங்கி விட்டதாக காட்டமாக விமர்சித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் பிரச்சாரம் செய்த சமாஜ்வாதி பிரமுகர் மரியா ஆலம்கான், வாக்கு ஜிஹாத் நடத்தினால் மட்டுமே மத்தியில் இருக்கும் கட்சியை ஆட்சியை விட்டு அகற்ற முடியும் என்று கூறியிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக வாக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், சமாஜ்வாதி பிரமுகரின் பேச்சை சுட்டிக் காட்டி பேசிய மோடி, “வாக்கு ஜிஹாத் குறித்து கூட்டணிக் கட்சி தலைவர்கள் பேசியதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. வாக்கு ஜிஹாத் குறித்து காங்கிரஸ் தனது மறைமுக ஆதரவை வழங்கி வருகிறது. வாக்கு ஜிஹாத் மூலம் இண்டியா கூட்டணி ஜனநாயகம், அரசமைப்பை அவமதித்துள்ளது,”இவ்வாறு பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal