‘நாட்டில் ஊழல் செய்வதில் காங்கிரஸ் அசல் என்றால், ஆம் ஆத்மி நிழலாக இருக்கிறது’ என்று பிரதமர் மோடி விளாசியிருக்கிறார்.

பஞ்சாப் மாநில தேர்தல் வரும் 20-ம் தேதி தொடங்குகிறது. இதன் முடிவு மார்ச் 10-ம் தேதி வெளியிடப்படுகிறது. மூன்று முனைப் போட்டியுடன் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் பத்தோன்காட் பகுதியில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

‘‘பஞ்சாப் நமக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அதே சமயம் எதிர்க்கட்சிகள் பஞ்சாபை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். கேப்டன் சஹாப் காங்கிரஸில் இருந்தபோது தவறான பாதையில் செல்வதை தடுத்து நிறுத்தினார். இப்போது அவரும் இல்லை.

காங்கிரஸ் அசல் என்றால் ஆம் ஆத்மி அதன் ஜெராக்ஸ். ஒருவர் பஞ்சாபை கொள்ளையடித்தார். மற்றொருவர் டெல்லியில் ஊழலில் ஈடுபட்டுள்ளார். இருவரும் ஒரே தட்டில் சாப்பிட்டாலும், சண்டையிடுவதுபோல் விளையாடுகிறார்கள். ஒருவருக்கொருவர் எதிரியாக நடிக்கிறார்கள்.

எங்கெல்லாம் பாஜக தன்னை நிறுவிக் கொள்கிறதோ அங்கெல்லாம் ரிமோட் கண்ட்ரோல் குடும்பம் (காங்கிரஸ்) அழிக்கப்பட்டது. எங்கு அமைதி நிலவுகிறதோ அங்கெல்லாம் சமாதானத்துடன் விடைகொடுக்கப்படுகிறது. பஞ்சாபிலும் அதே நிலையில் காங்கிரசை வழி அனுப்பி வைக்க வேண்டும்.

தொற்று நோய் இருந்தபோதிலும் பஞ்சாப்பில் உள்ள கோடிக்கணக்கான குடிமக்களுக்கு இந்தியா இலவச ரேஷன் வழங்கி வருகிறது. நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோம். யாரும் பசியுடன் இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்தோம்’’இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal