இந்தியாவைப் பொறுத்தளவில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் ஓரளவு பலித்திருக்கின்றன. ஆனால், தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் புதிய உத்வேகத்துடனும், இளைஞர்களின் எழுச்சியுடனும் தமிழக வெற்றிக் கழகம் தேர்தலை சந்தித்திருக்கிறது.

இதே போன்று கடந்த 2006ம் ஆண்டு நடிகர் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் சட்டசபை தேர்லை எதிர்கொண்டு 8 சதவித வாக்குகளைப் பிரித்தது. இதனால், மெஜாரிட்டியாக ஆட்சியைப் பிடிக்க வேண்டிய தி.மு.க., மைனாரிட்டியாக கூட்டணிக் கட்சிகளின் தயவுடன் ஆட்சியைப் பிடித்தது. தற்போது, அ.தி.மு.க.விக்கும் அதே நிலைமை ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தவிர, விஜயகாந்த் 8 சதவீத வாக்குகளைப் பிரித்தார். ஆனால், விஜய் அதற்கும் மேல் வாக்குகளைப் பிரிப்பாரா? எத்தனை சதவீத வாக்குகளைப் பிரிப்பார் என்பதை யாரும் கணிக்க முடியாமல் இருப்பதால்தான், யார் ஆட்சியைப் பிடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த சமயத்தில்தான் இன்று இரவு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வந்தாலும், அது எந்தளவிற்கு நம்பகத்தன்மையுடன் இருக்கும் என்று நம்பமுடியவில்லை. இந்த நிலையில்தான் தமிழகத்தில் ‘ஆபரேஷன் தாமரை’ திட்டத்திற்கு தயாராகியிருக்கிறாராம் அமித்ஷா!

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளை அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் எதிர்பார்த்திருக்கும் நிலையில், டெல்லி பாஜகவின் கணக்கு வேறு மாதிரியாக இருப்பது தெரிய வந்துள்ளது. டெல்லி பாஜக தலைமை தமிழ்நாட்டில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று நம்புவதாகவும், என்டிஏ கூட்டணி 100 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த தேர்தலுக்கு பின் திமுக தலைவர்கள் ஓய்வு எடுக்க சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்தனர். எடப்பாடி பழனிசாமி அதிமுக ஆட்சி கட்டாயம் அமையும் என்று குடும்பத்தினருடன் நம்பிக்கையாக கூறி வருகிறார். மறுபக்கம் தவெக தலைவர் விஜய் கோயில் கோயிலாக சுற்றத் தொடங்கியுள்ளார்.

இந்த 3 கட்சிகளுமே ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கையில் அமைச்சரவை வரைக்கும் லிஸ்ட்டை தயார் செய்துவிட்டனர். அதேபோல் சில ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சைலண்ட்டாக கட்சித் தலைவர்களையும் சந்தித்துள்ளனர். ஆனால் டெல்லி பாஜக தலைமை தமிழ்நாட்டிற்கு என்ன கணக்கு வைத்திருக்கிறது என்பதே கேள்வியாக இருக்கிறது. இதுதொடர்பாக விசாரித்த போது, தவெக பிரிக்கப் போகும் வாக்குகள் காரணமாக தமிழ்நாட்டில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று டெல்லி பாஜக தலைமை நம்பி இருக்கிறது. தொங்கு சட்டசபை தான் அமையும் என்று அமித்ஷாவும் நம்பியுள்ளாராம்.

என்டிஏ கூட்டணி கட்டாயம் 100 தொகுதிகள் கைப்பற்றும் என்ற நம்பிக்கையுடனும் உள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். ஒருவேளை தொங்கு சட்டசபை அமைந்தால், தவெக பக்கம் உருவாகும் எம்எல்ஏ-க்களே முதல் குறி என்று கூறுகிறார்கள். அதற்கேற்ப தமிழ்நாட்டிற்கு ஆளுநர் நியமனம் செய்யப்படவில்லை. கேரளா ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் கூடுதல் பொறுப்புகளை கவனித்து வருகிறார். ஆனால் என்டிஏ கூட்டணி வெற்றிக்கு அருகில் வந்தால் மட்டுமே, இந்த திட்டத்தை செயல்படுத்த பாஜக தலைமை திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

2006 சட்டசபைத் தேர்தலில் மட்டுமே திமுகவுக்கு தனித்து பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்போதும் கூட திமுக கூட்டணி கட்சிகளாக அதிக இடங்களை வென்றிருந்தது. திமுக தனி பெரும்பான்மை பெறாததற்கு விஜயகாந்த்தின் அரசியல் வருகை காரணமாக அமைந்தது. தற்போது விஜய் அரசியல் வருகை மீண்டும் அப்படியொரு சூழலை உருவாக்குமா என்பதை மே 4ஆம் தேதி வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal