நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு அதிகளவில் பரிசு மற்றும் விட்டமின்களை கொடுத்து வருவதாக தகவல்கள் வந்தன. இதனையடுத்து, ‘மேலிடம்’ முக்கிய அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியின் வலதுகரமான சேலம் இளங்கோவன் வீட்டில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முதல் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட பல அமைச்சர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் ரெய்டு செய்து,முக்கிய ஆவணங்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரும், அவரின் நிழலுமான கூட்டுறவு வங்கி இளங்கோவன் வீடுகளில் சேலம் மாவட்ட எஸ்.பி, மற்றும் பறக்கும் படையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது எடப்பாடி தரப்பை கொஞ்சம் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இந்த ரெய்டு பற்றி அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசினோம்.

‘நகர்ப்புற தேர்தலில் மேயர் பதவியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று தி.மு.க. காய் நகர்த்தி வருகிறது. சேலம், கோவை போன்ற மாநகராட்சிகள் அ.தி.மு.க. வசம் செல்ல வாய்ப்புள்ளது என்று உளவுத்துறை மூலம் ஆளுந்தரப்பிற்கு தகவல் சென்றிருக்கிறது.

நாளையுடன் பிரச்சாரம் ஓய்வடைவதால், நாளை மறுநாள் பணப்பட்டுவாடாவில் கட்சியினர் இறங்குவார்கள். எனவே, சேலத்தில் அ.தி.மு.க.வினர் பட்டுவாடாவில் இறங்காமல் இருப்பதற்காகத்தான் இந்த ரெய்டு. எடப்பாடிக்கு நெருக்கமான வேலுமணியிடம் சோதனை என்பதையும் தாண்டி, எடப்பாடியின் உதவியாளர் ஒரு தனிப்பிரிவு உதவியாளராக இருந்த மணி என்பவர் வீட்டிலும் ரெய்டு நடந்தது. அவரை போலீசார் கைது செய்தது மேலும் அதிர்ச்சியை வெளிப்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து சேலம் இளங்கோவன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சேலம் இளங்கோவன் வீட்டில் சோதனை எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் ரெய்டு நடத்துவது போன்றது. எனவே, அடுத்து எடப்பாடியாருக்கும் நெருக்கடி ஏற்படலாம்’’ என்றனர்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal