டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் இழப்பீடு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில், இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் அரசுக்கு 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அளிக்கப்பட்ட புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் சுமார் 45 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் 397 கோடி ரூபாய் வரை அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கம் மற்றும் அதிமுக வழக்கறிஞர் அணி தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் பங்கேற்ற ஒப்பந்ததாரர்கள் அனைவரும் ஒரே விலையை குறிப்பிட்டதால் தான் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் வெறும் யூகத்தின் அடிப்படையிலானவை என்றும் அரசியல் உள்நோக்கத்தோடும், விளம்பர நோக்கத்தோடும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில், இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், 2 வாரங்களில் அனைத்து ஆவணங்களையும் சிபிஐயிடம் ஒப்படைக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
