தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் இன்று மாலை 6 மணிக்கு மேல் வெளியாகிறது.
அசாம், கேரளா, புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகிய 3 சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 9-ம் தேதி முடிந்தது. தமிழக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக கடந்த 23-ம் தேதி தேர்தல் முடிந்தது.
மேற்குவங்கத்தில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி முதல்கட்ட தேர்தல் 23-ல் முடிந்தது. இன்று 2-ம் கட்ட தேர்தல் முடிவடைகிறது. இத்துடன் இன்று மாலை 6 மணியுடன் 5 மாநில தேர்தல் முடிவுக்கு வருகிறது.
இதனால், அனைவரின் பார்வையும் இப்போது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளின் மீது திரும்பியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்து 30 நிமிடங்களுக்குப் பிறகுதான் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட வேண்டும்.
இதன்படி, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று மாலை 6.30 மணிக்கு மேல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23-ம் தேதி நடந்த முதற்கட்டத் தேர்தலில் 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. பல பகுதிகளில் கிட்டத்தட்ட 93% என்ற சாதனை அளவிலான வாக்குகள் பதிவாகின. இதுபோல தமிழ்நாட்டில் 85.1%, அசாமில் 85.5%, கேரளாவில் சுமார் 78% புதுச்சேரியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 89.87% வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தல் நடைபெற்ற அனைத்து மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெற உள்ளது.
