பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தாலும், சிறைவிவகாரம் ஒன்று சசிகலாவை மீண்டும் சிறைக்கு அனுப்பிவிடுமோ என்ன அச்சம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

கடந்த 1991-96-ம் ஆண்டு ஆட்சி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சசிகலா, சுகாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந் தேதி பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறையில் இருந்தபோது சொகுசு வசதிகள் செய்து கொடுப்பதற்காக சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கில் சசிகலா, இளவரசி சிக்கினர். இந்த வி‌ஷயத்தை அப்போது சிறை அதிகாரியாக இருந்த ரூபா அதிரடியாக வெளிக்கொண்டு வந்ததுடன் சசிகலா மீதும் மற்ற சிறை அதிகாரிகள் மீதும் பல்வேறு குற்றசாட்டுகளை கூறினார்.

பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு தனி சமையலறை வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் டி.ஐ.ஜி. ரூபா குற்றம்சாட்டினார். மேலும், சிறையில் மற்ற வி.ஐ.பி. கைதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு இல்லாத சூழல் என பலவற்றை அம்பலப்படுத்தினார். அதன் அடிப்படையில் சசிகலா, இளவரசி மற்றும் சிறை அதிகாரிகள், ஊழியர்கள் 6 பேருக்கு எதிராக பெங்களூரு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு பதிந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக போலீஸ் அதிகாரி கிருஷ்ண குமார், 2-வது குற்றவாளியாக டாக்டர் அனிதா, 3-வது குற்றவாளியாக சுரேஷ், 4-வது குற்றவாளியாக கஜராஜ் மாகனூர், 5-வது குற்றவாளியாக சசிகலா, 6-வது குற்றவாளியாக இளவரசி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கு சமீபத்தில் நீதிபதி லட்சுமி நாராயணபட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரும் அடுத்த மாதம் 11-ந் தேதி நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் சிறை அதிகாரிகள் சிலர் அப்ரூவராக மாறும் மனநிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இந்த தகவல்கள்தான் தற்போது சசிகலாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறதாம்.

இது பற்றி சசிகலாவுக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசினோம்.
‘‘சிறையிலிருந்து வெளியே வந்த ‘சின்னம்மா’ (சசிகலா) நிம்மதியாக இல்லை. எப்படியும் அ.தி.மு.க. தன்வசப்படும் என்று எதிர்பார்த்தார் – அது நடக்கவில்லை. ஓ.பி.எஸ்.ஸாவது ‘பழசை’ மறந்து மீண்டும் தன்னிடம் அடைக்கலம் புகுவார் என்று எதிர்பார்த்தார் – அதுவும் நடக்கவில்லை. டி.டி.வி.தினரகனும் ‘வேறு மாதிரி’ அரசியல் செய்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில்தான் பெங்களூரு சிறையிலிருந்து வெளியே வந்த பிறகும், சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்குவிவகாரம் சின்னம்மாவின் தூக்கத்தையே தொலைக்க வைத்துவிட்டது. ஆரம்ப கால கட்டத்தில் சின்னம்மாவின் வழக்கு விவகாரங்களில் ஆர்வம் காட்டிய டி.டி.வி., தற்போது ஒதுங்கி இருக்கிறார்.

வருகிற 11&ந்தேதி வழக்கு விசாரணைக்கு ஆஜராகலாமா..? இல்லை விலக்கு கேட்கலாமா என்று வழக்கறிஞர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார் சின்னம்மா. இந்த வழக்கிற்காக மூத்த வழக்கறிஞர்கள் யாரையாவது களத்தில் (காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களை மீண்டு இறக்காதீர்கள்… அதுவே உங்களுக்கு எதிர்வினையாக மாறும்) இறக்கலாமா என்ற யோசனையும் இருக்கிறது’’ என்ன சொன்னவர்கள், அடுத்து பேசியதுதான் அதிர்ச்சி ரகம்.

‘‘அ.தி.மு.க.வை சின்னம்மா கைப்பற்ற நினைப்பதால்தான் அவருக்கு சிக்கல்கள் தொடர்கிறது. எனவே, இனி வரும் காலங்களில் நிம்மதியாக இருப்பதற்கு, அரசியலை விட்டே விலகியிருக்க உறவினர்கள் வற்புறுத்துகிறார்களாம். எனவே, உள்ளாட்சித் தேர்தல் முடிவைப் பார்த்துவிட்டு அரசியலுக்கு முழுக்கு போட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal