நீட் தேர்விற்கு எதிரான தமிழக அரசின் சட்ட போராட்டம் தொடரும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வரின் உரைக்கு பின்னர், நீட் விலக்கு கோரும் மசோதா, சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது.

தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, ‘‘நீட் தேர்வு அரசியல் சாசனப்படி ஏற்படுத்தப்பட்ட தேர்வு அல்ல. இந்த தேர்வு, ஆள் மாறாட்டம், விடைத்தாள் திருத்தம் என அனைத்து வித முறைகேடுகளும் நடந்தது. இது குறித்து சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த தேர்வு, சிலரை கல்லறைக்கும், சிலரை சிறைச்சாலைக்கும் அனுப்பி வைத்தது. நீட் ஒரு பலிபீடம் ஆகும். அரியலூர் அனிதா உள்ளிட்ட பலரை இழந்திருக்கிறோம். நீட், தேர்வு முறை அல்ல.பயிற்சி முறை. இது முறையான தேர்வு அல்ல. அது ஒரு நவீன தீண்டாமை.தனியார் பயிற்சி மையங்களை மட்டுமே ஊக்குவிக்கும்.

தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு, அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு பரிந்துரை அடிப்படையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை திருப்பி அனுப்பியதற்காக, கவர்னர் கூறிய காரணங்கள் ஏற்புடையது அல்ல.இந்த 5 ஆண்டுகளாக எதிர்த்து வருகிறோம். நீட் தேர்வுக்கு முன் 90 சதவீத இடங்களை மாநில பாட திட்ட மாணவர்களை பெற்று வந்தனர்.

இந்த தேர்வு சமூக நீதி, சமத்துவத்திற்கு எதிரானது, பணக்கார தத்துவம் பற்றி பேசுகிறது. அரசியலமைப்பு சட்டத்தின் அனைத்து கூறுகளுக்கும் எதிரானது. திருப்பி அனுப்பியதன் மூலம் சட்டசபையின் இறையாண்மை கேள்விக்குறியாக உள்ளது. மாநில சுயாட்சிக்கு விடுக்கப்பட்டுள்ள சவால். கூட்டாட்சி தத்துவம் தலைகவிழ்ந்து நிற்கிறது.அரசியலமைப்பு சட்டம் சமூக நீதியை நிலைநாட்டுகிறது. நீட் தேர்வு அநீதியை நிலைநாட்டுகிறது. சட்டசபை தீர்மானத்தை கவர்னரால் நிறுத்தி வைக்க முடியும் என்றால், மற்ற மாநிலங்களின் கதி என்ன.

நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் வரை தமிழக அரசின் சட்ட போராட்டம் ஓயாது. கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும் காட்சியாக சமீப காலமாக நடந்து வரும் காட்சிகள் நிகழ்ந்து வருகிறது.வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான் இந்தியாவின் கூட்டாட்சி தத்துவம். நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெறாமல் விட போவது இல்லை.

பார்லிமென்டோடு முரண்படும் சட்டத்தை சட்டசபை இயற்றினால், அதனை ஜனாதிபதிக்கே அனுப்பி வைக்க வேண்டும். மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம் தமிழக சட்டசபை புதிய வரலாறு படைக்க உள்ளது. ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பது கவர்னரின் கடமை. கவர்னர் இதனை கவர்னர் சரியாக செய்வார் என எதிர்பார்க்கிறேன்.என்பவர் அமைச்சரவைக்கு கட்டுப்பட்டே நடக்க வேண்டும். பொது பட்டியலில் உள்ள பொருட்கள் மீது சட்டம் இயற்ற மாநில அரசிற்கு உரிமை உண்டு. நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம் இந்தியாவிற்கு ஒளி விலக்கு ஏற்றி வைக்க உள்ளோம்’’ இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

முதல்வரின் பதிலுரைக்கு பின்னர், நீட் தேர்வில் விலக்கு கோரும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதம் துவங்கிய உடன் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்த நிலையில், மற்ற கட்சிகள் ஆதரவு அளித்தன. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதா, இன்றே கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal