தமிழக சட்டசபையில் இன்று கொண்டு வரப்பட்ட நீட் எதிர்ப்பு மசோதாவை ஆதரித்து பா.ஜனதாவை தவிர அனைத்து கட்சி உறுப்பினர்களும் பேசினார்கள். சட்டமன்றத்தில் அ.தி.மு.க., காங்கிரஸ், தி.மு.க. உறுப்பினர்கள் இடையே நடந்த காரசார விவாதங்கள் நடந்தன!

அ.தி.மு.க. சார்பில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசும்போது, ‘‘அ.தி.மு.க. ஆட்சி காலத்திலும் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீட் தேர்வு எதிர்ப்பு வி‌ஷயத்தில் அ.தி.மு.க. எப்போதும் பின்வாங்கியது இல்லை. அதில் உறுதியாக உள்ளது. 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை ஏழை மாணவர்களுக்கு வழங்கியவர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

அ.தி.மு.க.வின் இதுபோன்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் வழிகாட்டிக்கொண்டு இருப்பவர் எங்கள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம். இருவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 2005-ம் ஆண்டுதான் முதல் முறையாக ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது நுழைவுத் தேர்வு வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான ஆணையும் பிறப்பிக்கப்பட்டது’’ என்றார்.

அப்போது மா.சுப்பிரமணியன் குறுக்கிட்டு பேசினார். அவர் பேசும்போது, ‘‘2005-ம் ஆண்டில் நுழைவு தேர்வு வேண்டாம் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டதாக விஜயபாஸ்கர் கூறுவது தவறான தகவல் ஆகும். 2006-ம் ஆண்டில் கருணாநிதி முதல் -அமைச்சராக இருந்த போதுதான் நுழைவுத்தேர்வு வேண்டாம் என்ற சட்டத்தை கொண்டு வந்தார்’’ என்று குறிப்பிட்டார்.

இதற்கு பதில் அளித்து பேசிய விஜயபாஸ்கர், ‘‘எங்கள் ஆட்சியில் 19.6.2005-ல் நுழைவு தேர்வே வேண்டாம் என்கிற அரசாணையை அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார். அதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு அந்த சட்டம் ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதனை நீங்கள் (தி.மு.க.) ஆட்சியில் செயல்படுத்தினீர்கள்’’ என்று பதில் அளித்தார்.

அதன் பிறகும் தொடர்ந்து பேசிய விஜயபாஸ்கர், ‘‘நீட் எதிர்ப்பு வி‌ஷயத்தில் அ.தி.மு.க. எப்போதும் பின்வாங்கியது இல்லை. அதில் இருந்து ஒரு துளிகூட தடம் மாறவும் இல்லை. ஆனால் நீட் எதிர்ப்பு வி‌ஷயத்தில் அ.தி.மு.க. யாருக்கோ அடிபணிந்து விட்டது என்ற தவறான தகவலை பரப்பி வருகிறார்கள். நீட் எதிர்ப்பு கொள்கையில் அ.தி.மு.க. எப்போதும் உறுதியாக இருக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை. தமிழக அரசு மேற்கொள்ளும் சட்டப் போராட்டங்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். அதில் மாற்றுக் கருத்தே இல்லை.

யாருக்கும் அடிபணிய வேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை. பாராளுமன்றத்தில் என்.என்.சி. என்கிற நீட் தொடர்பான மசோதா கொண்டு வரப்பட்டபோது அதனை அ.தி.மு.க. எதிர்த்தது. அது வரலாற்றில் உள்ளது. தமிழக மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த திட்டத்தையும் நெஞ்சுறுதியோடு அ.தி.மு.க. எதிர்க்கும். இந்த அவையில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் செல்வபெருந்தகை, ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் பேசியது பற்றி சில கருத்துக்களை தெரிவித்தார்.

நீட் என்றால் என்ன? என்பது யாருக்குமே தெரியாமல் இருந்தது. நீட் என்ற வார்த்தையை நாம் உச்சரிக்காமல்தான் இருந்தோம். ஆனால் காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது’’ என்றார்.

அப்போது காங்கிரஸ் உறுப்பினர் செல்வபெருந்தகை உள்பட காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று விஜயபாஸ்கரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அ.தி.மு.க. உறுப்பினர்கள் விஜயபாஸ்கருக்கு ஆதரவாக எழுந்து பேசினார்கள். இந்த நேரத்தில் செல்வபெருந்தகை எழுந்து நின்று பேசுவதற்கு முற்பட்டார். சபாநாயகர் அப்பாவு, அவரை அமருமாறு கூறினார். ஆனால் அவர் உடனடியாக தனது இருக்கையில் அமராமல் நின்று கொண்டே இருந்தார்.அவருக்கு ஆதரவாக மற்ற காங்கிரஸ் உறுப்பினர்களும் எழுந்து நின்று குரல் எழுப்பினார்கள்.

இதற்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மேலும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சட்டசபையில் யார் என்ன பேசுகிறார்கள் என்பதே தெரியாமல் கடுமையான கூச்சல்-குழப்பம் நிலவியது. அ.தி.மு.க.- காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு மோதலிலும் ஈடுபட்டனர். அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுந்து பேசினார். இதையடுத்து அ.தி.மு.க., காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களது இருக்கையில் அமர்ந்தனர். மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘இந்த அவையில் நீட் எதிர்ப்பு தீர்மானத்தை நாம் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும் என்றுதான் இங்கு கூடியுள்ளோம். இந்த நேரத்தில் வேறு வி‌ஷயங்களை பேசி பிரச்சினைகளை திசை திருப்பிவிட வேண்டாம். நீட் எதிர்ப்பு மசோதாவை ஒருமனதாக நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் மு.க.ஸ்டாலின் கூறும்போது, ‘‘உங்கள் ஆட்சியில் நீட் தேர்வு எதிர்ப்பு மசோதாவை ஜனாதிபதி திருப்பி அனுப்பியபோது, ஒரு வருடம் நீங்கள் எதுவுமே கேட்கவில்லை என்பதை மறந்துவிடக் கூடாது’’ என்று குற்றம்சாட்டினார். இதற்கு பதில் அளித்த விஜயபாஸ்கர், ‘‘அது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆய்வு செய்து, ஜனாதிபதி திருப்பி அனுப்பியது ஏன்? என்று கேட்டோம்’’ என்று கூறினார்.

அப்போது காங்கிரசை பற்றியும் நீட் தேர்வு குறித்தும் விஜயபாஸ்கர் ஒரு வார்த்தையை கூறினார். அதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து விஜயபாஸ்கர் பேசிய அந்த வார்த்தையை நீக்குவதாக சபாநாயகர் அறிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட அவை முன்னவர் துரைமுருகன்,‘‘இந்த நேரத்தில் நீட் தேர்வை கொண்டு வந்தது யார்? என்பதுபற்றிய நீயா? நானா? போட்டி வேண்டாம். நீட் எதிர்ப்பு மசோதாவை ஒரு மனதாக நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்’’ என்று கூறினார். அப்போது எடப்பாடி பழனிசாமி எழுந்து விஜயபாஸ்கருக்கு ஆதரவாக பேசினார். அப்போது நீட் தேர்வை கொண்டு வந்தது யார்? என்பதை குறிப்பிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாலேயே விஜயபாஸ்கர் அது பற்றி பேசி இருக்கிறார்’’ என்று தெரிவித்தார்.

இதற்கும் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை சபாநாயகர் அமரச் சொன்னார். அப்போது குறுக்கிட்ட துரைமுருகன், ‘‘எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது குறுக்கிடுவது சரியல்ல’’ என்று தெரிவித்தார். அதன் பிறகு தொடர்ந்து பேசிய விஜயபாஸ்கர், ‘‘நீட் தேர்வு எதிர்ப்பு வி‌ஷயத்தில் அ.தி.மு.க. எப்போதும் உறுதுணையாக இருக்கும். இதற்காக மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகளுக்கு அ.தி.மு.க. முழு ஆதரவு தெரிவிக்கிறது’’ என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal