நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறி பா.ஜ.க. தனித்துப் போட்டியிடுகிறது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,
‘‘தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று பா.ஜ.க, தனித்து போட்டியிடுகிறது. வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மட்டும் அதிமுக கூட்டணி இல்லாமல் பா.ஜ.க, போட்டியிடுகிறது. இந்த முடிவை தேசிய தலைமையும் ஏற்றுக்கொண்டுள்ளது. அதிமுக உடனான கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணியாக தொடரும். அடுத்த 15, 20 நாட்கள் கடினமாக உழைத்து இல்லம் தோறும் தாமரை மலர செய்ய வேண்டும். அதிமுக உடனான நல்லுறவு வரும் காலங்களிலும் தொடரும்.

நகர்ப்புற தேர்தலில் அதிகமான இடங்களில் போட்டியிடுவதே பா.ஜ.,வின் நிலைப்பாடு. முதல்கட்ட கூட்டணி பேச்சுவார்த்தையில் 10 சதவீத இடங்களை கேட்டோம். ஆனால், பா.ஜ.க, கேட்ட இடங்களை அதிமுக தரவில்லை. எங்களின் பொது எதிரி திமுக. அவர்களின் 8 மாத ஆட்சியை மையப்படுத்தியே பிரசாரம் இருக்கும். திமுக ஆட்சியில் மக்களுக்கு செய்யாத திட்டங்களை வீடுவீடாக எடுத்துசெல்ல இருக்கிறோம்.

2024 லோக்சபா தேர்தலில் அதிமுக – பா.ஜ.க, இணைந்தே தேர்தலை சந்திக்கும். அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரிய உந்துசக்தி. பா.ஜ.க,வின் எல்லா திட்டங்களுக்கும் அதிமுக உறுதுணையாக இருந்தது. 2021 தேர்தலில் முழு ஒத்துழைப்பு கொடுத்தது. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியில் சில சங்கடங்கள் இருந்தன. பா.ஜ., அடுத்த கட்ட வளர்ச்சிக்கு செல்ல வேண்டுமென்றால் உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும்’’ இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ.க. தனித்துப் போட்டியிடுவது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, ‘‘தற்போது நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க., சில கட்சிகளோடு கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது-. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுன் கூட்டணி வைக்குமா என்று இப்போதைக்கு சொல்ல முடியாது. தற்போது நாங்கள் பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இல்லை’’ என்று பேசினார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூட்டணி தொடரும் என்று சொல்லிவந்த நிலையில், பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று அ.தி.மு.க. பேசி வருவதும்தான் அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal