நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், பா.ம.க. தனித்துப் போட்டியிடவுள்ள நிலையில், அ.தி.மு.க.வில் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை முடிவு செய்து விட்டது. இந்த நிலையில் இன்று மாலை தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என தகவல்கள் கசிகிறது.

தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி முக்கிய பெரிய கட்சியான தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுடன் வார்டு பங்கீடு குறித்து கடந்த 4 நாட்களாக பேசி வந்தது. காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஆகியவற்றின் மாவட்டத் தலைவர்கள் தி.மு.க. மாவட்டச் செயலாளர்களை சந்தித்து பேசி வந்தனர்.

தி.மு.க. தலைவரான முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன், வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் சந்தித்து பேசினார்கள். அப்போது வார்டு பங்கீடு குறித்து மாவட்ட செயலாளர்கள் தான் முடிவு செய்கிறார்கள். அவர்களிடம் உங்கள் கட்சி மாவட்டத் தலைவர்கள் பேசி முடிவு செய்துகொள்ளுங்கள். அதில் ஏதாவது திருப்தி இல்லை என்றால் எங்கள் கவனத்துக்கு கொண்டு வாருங்கள் நாங்கள் சொல்கிறோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

இதைத்தொடர்ந்து ஒவ்வொரு தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் கூட்டணி கட்சி தலைவர்கள் பேசி உடன்பாடு கண்டனர். இதில் காங்கிரஸ், ம.தி.மு.க. கட்சிகளை தவிர மற்ற கூட்டணி கட்சியினர் ஒப்பந்தத்தில் நேற்றே கையெழுத்து போட்டுவிட்டனர். இரு கட்சிகளுடன் இன்று மீண்டும் பேசி முடிவு செய்து விடுவோம் என்றும் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூறினார்கள்.

அதற்கேற்ப தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் இன்று மாலைக்குள் அண்ணா அறிவாலயத்தில் வேட்பாளர் பட்டியலை ஒப்படைத்து விடுவதாகவும் தெரிவித்தனர். சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை 200 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 16 அல்லது 18 வார்டுகள் வரை ஒதுக்கப்படக்கூடும் என தெரிகிறது.

இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா 4 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து தி.மு.க. மாவட்ட செயலாளர்களான மா.சுப்பிரமணியன், சேகர் பாபு கூறுகையில், ‘‘கூட்டணி கட்சிகளுடன் இன்று சுமூக உடன்பாடு ஏற்படுத்தி விடுவோம். தி.மு.க. வேட்பாளர் பட்டியலையும் இன்று மாலை அண்ணா அறிவாலயத்துக்கு அனுப்பி வைத்து விடுவோம்’’ என்றனர்.

இதேபோல் ஆவடி மாநகராட்சிக்கான தி.மு.க. வேட்பாளர் பட்டியலை இன்று மாலைக்குள் அண்ணா அறிவாலயத்துக்கு அனுப்பி வைத்து விடுவதாக பால்வளத்துறை அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான ஆவடி சா.மு.நாசர் தெரிவித்தார். தாம்பரம் மாநகராட்சிக்கான தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தயாராக உள்ளதாகவும் இன்று மாலைக்குள் வேட்பாளர் பட்டியலை அறிவாலயத்துக்கு அனுப்பி விடுவதாக காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.

21 மாநகராட்சிகளுக்காக தி.மு.க. வேட்பாளர் பட்டியலும் அண்ணா அறிவாலயத்துக்கு இன்று வந்து விடுவதால் இன்று மாலையே முதற்கட்ட தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். இன்றைய தினம் தை அமாவாசை என்பதால் அ.தி.மு.க.விலும் அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal