இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால், பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீசாகுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதுவும் வலிமை ரிலீசாகுமா என்று அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

2022 ம் ஆண்டு பொங்கலை குறிவைத்து பல பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் தேதியை அறிவித்தன. ஆனால் திடீரென தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சம் தொட்டதால், தியேட்டர்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனால் பெரிய பட்ஜெட் படங்கள் சற்று தயக்கம் காட்ட துவங்கின. வரிசையாக அடுத்தடுத்து படங்களின் ரிலீஸ், மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டன.

உண்மையில் 50 சதவீதம் பேருக்கு மட்டும் என்பது பிரச்சனை இல்லை. 2021 ம் ஆண்டு பொங்கலின் போதும் 50 சதவீதம் பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருந்த சமயத்திலும் விஜய்யின் மாஸ்டர், தனுஷின் கர்ணன் படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்து, வசூல் சாதனை படைத்ததால் அனைவருக்கும் நம்பிக்கை ஏற்பட்டது. 50 சதவீதம் பேர் என்பது பிரச்சனையே கிடையாது. ஆனால் இரவு நேர ஊடரங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊடரங்கு என அறிவிக்கப்பட்டது தான் தயாரிப்பாளர்களை யோசிக்க வைத்தது. வார இறுதி நாட்கள், மாலை நேர ஷோக்களில் தான் வசூலை பார்க்க முடியும். அதற்கு சிக்கல் வந்ததால் தான் படங்களின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.

தற்போது தமிழக அரசு, இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு ஆகியன ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இதனால் ஆர்ஆர்ஆர், வலிமை, ராதே ஷ்யாம் போன்ற படங்கள் பிப்ரவரி மாத ரிலீசை குறிவைத்து, தேதிகளை முடிவு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. இதனால் பிப்ரவரியில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்ட படங்கள் ஏற்கனவே அறிவித்த தேதியில் ரிலீஸ் செய்யலாமா, வேண்டாமா என குழப்பத்தில் உள்ளன. தியேட்டர்கள் கிடைப்பது, வசூல் என அனைத்திலும் சிக்கல் வரும் என யோசிக்கின்றன. இதற்கிடையில் விஷாலின் வீரமே வாகை சூடும் படம் ஜனவரி 14, ஜனவரி 26 என இருமுறை ரிலீஸ் தேதியை தள்ளிவைத்து, பிப்ரவரி 4 ல் ரிலீஸ் செய்யலாமா என யோசித்து வந்தது. தற்போதைய சூழலில் படம் இன்னும் தள்ளி போகலாம் என கூறப்படுகிறது.

ஏப்ரலில் விஜய்யின் பீஸ்ட் உள்ளிட்ட பல படங்கள் ரிலீசாக உள்ளதால் பிப்ரவரியா, மார்ச்சா என முடிவு செய்ய முடியாமல் பல படங்கள் குழம்பி போய் உள்ளன. பெரிய படங்களுக்காக மார்ச் மாதத்திற்கு ரிலீசை தள்ளி வைக்கலாம் என்றால், முந்தைய ஆண்டுகளை போல் கோடையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்தால், புதிய உத்தரவுகள் வந்து மார்ச் மாதமும் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் போய் விடுமே என அச்சமும் பல தயாரிப்பாளர்களிடம் காணப்படுகிறது.

எனவே, பிப்ரவரி மாதத்தில் வலிமை உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீசாகலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal