நாளை விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளேன் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்
அதிமுக முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏவுமாக இருந்த சி. விஜயபாஸ்கர் கடந்த (ஜூன்) மாதம் 16 ஆம் தேதி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை சந்தித்து தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தார். அதனை சபாநாயகரும் ஏற்றுக்கொண்டார். இதனால் விராலிமலை தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே அதிமுகவில் இருந்து இசக்கி சுப்பையா உள்பட 4 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த நிலையில் விஜயபாஸ்கரும் விஜய்யின் பிறந்தநாள் அன்று தவெகவில் இணைவார் என பேசப்பட்டது. ஆனால் விஜயபாஸ்கர் மீது குட்கா உள்ளிட்ட ஊழல் வழக்கு இருப்பதாலும், தன்னை தூய சக்தி என காட்டிக்கொள்ளும் தவெக விஜயபாஸ்கரை இணைத்தால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகும் என்பதாலும் விஜயபாஸ்கரை இணைக்க தாமதம் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் தான் அதிமுக முன்னாள் அமைச்சரும் கரூர் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த எம்.ஆர் விஜயபாஸ்கரும் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இதனால் அதிமுகவில் இருந்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்தது. சி விஜயபாஸ்கரும், எம்.ஆர் விஜயபாஸ்கரும் நாளை தவெகவில் இணையலாம் என பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் நாளை தவெகவில் இணைய உள்ளதாக சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சி விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள பதிவில், “அன்பார்ந்த பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு, வணக்கம். நலமே சூழ்க! கடந்த 35 ஆண்டு காலமாக அரசியல் களத்தில் நான் ஆற்றி வருகின்ற மக்கள் பணிகளும், பொதுநலத் தொண்டுகளும் நீங்கள் அறிந்ததே.
குறிப்பாக, தமிழ்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சராக நான் பொறுப்பு வகித்தபோது, உலகையே உலுக்கிய ‘கோவிட்’ பெருந்தொற்று காலகட்டத்தில் முழு அர்ப்பணிப்போடு மக்களுக்காக நான் ஆற்றிய பணிகளை நீங்கள் நன்கறிவீர்கள். நம் மண்ணுக்கும், மக்களின் நல்வாழ்வுக்குமான என் பொதுவாழ்வு பயணத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் மாற்றத்தின் புதிய தொடக்கமாக, மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, நல்லாட்சி புரிந்து வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் என்னை இணைத்துக்கொண்டு, என் அரசியல் பயணத்தை புதிய உத்வேகத்துடன் தொடர இருப்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கான மாபெரும் இணைப்பு விழா, வருகிற வியாழக்கிழமை (02.07.2026), காலை 9.00 மணி முதல், மகாபலிபுரம் Four Points by Sheratonஹோட்டல் அரங்கில் மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் ஊடக நண்பர்களாகிய தாங்கள் நேரில் கலந்து கொண்டு, நிகழ்வை பதிவு செய்து, தங்களது வாழ்த்துகளையும் ஆதரவையும் வழங்கிட அன்புடன் அழைக்கின்றேன். வாருங்கள்! சந்திப்போம்! நன்றி!” என்று பதிவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை சி.விஜயபாஸ்கர் த.வெ.க.வில் இணையும் போது, தனது ஆதரவாளர்களுடன் கரூர் விஜயபாஸ்கரும் இணைவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. எனவே பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இணைவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
