அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சட்டசபை செயலாளர் சாந்தி பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என அவர் கூறியிருக்கிறார்.
முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு கடந்த மே 13-ந்தேதி சட்டசபையில் நடந்தது. அப்போது, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 25 பேர், கட்சியின் கொறடா உத்தரவை மீறி த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்கு அளித்தனர். இதையடுத்து, அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகரனிடம், அ.தி.மு.க. தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மதுராந்தகம் குமரவேல் பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகரிடம் மனு அளித்தனர். அவர்கள் அத்துடன் உடனடியாக த.வெ.க.வில் சேர்ந்தனர். இவர்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார்.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க. கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், ‘தகுதி நீக்கம் செய்யக்கோரும் மனு நிலுவையில் உள்ள நிலையில் இந்த 4 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இந்த 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட தடை விதிக்க வேண்டும்” என்று கூறினார்.
இதேபோல, சென்னை ஹைகோர்ட்டில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் வக்கீல் எம்.எல்.ரவியும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சட்டசபை செயலாளர், குமரவேல் உள்ளிட்ட 4 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டசபை செயலாளர் சாந்தி பதில் மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறுகையில், ‘‘அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களாக இருந்த 4 பேர் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக் கொண்டதால், அந்த 4 பேர் மீதான தகுதி நீக்க நடவடிக்கை செல்லாததாகி விடும் என்று கூறுவது தவறு ஆகும்.
ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதால், அவர்கள் தகுதி நீக்க நடவடிக்கை இருந்து விடுவிக்கப்படமாட்டார்கள். 4 பேரை தகுதி நீக்கம் செய்யக்கோரும் மனுவை சபாநாயகர் தொடர்ந்து விசாரிப்பார். அந்த விசாரணை முடிந்து இறுதி முடிவு எடுக்கப்பட்ட பின்னரே, அந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தலையிட முடியும். 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு தேர்தல் நடத்தக்கூடாது என்று கேட்க முடியாது. இவர்களது ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்றுக்கொண்ட விவகாரத்தில் சந்தேகம் கொள்ள எந்த ஆதாரமும் கிடையாது. சட்டரீதியான இந்திய அரசியல் சாசன கடமையை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நிறைவேற்றியுள்ளார்.
இதில் உள்நோக்கம் எதுவும் கிடையாது. அத்துடன் சட்டசபை விதிகளும் தகுதி நீக்கம் செய்யக்கோரும் மனு மீது முடிவு எடுத்த பின்னரே, ராஜினாமா கடிதங்களை ஏற்க வேண்டும் என்று கூறவில்லை. எனவே தகுதி நீக்கம் செய்யக்கோரும் மனு பற்றி குறித்த காலத்துக்குள் சபாநாயகர் விசாரித்து முடிப்பார். இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ இவ்வாறு சட்டசபை செயலாளர் சாந்தி கூறியுள்ளார்.
