‘இண்டியா’ கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகிய நிலையில், திடீரென்று போடப்பட்ட ஒரு கையெழுத்துதான் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) எதிராக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இண்டியா கூட்டணி கடிதம் எழுதியுள்ளது. இந்த கடிதத்தில், திமுக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளும் கையெழுத்திட்டுள்ளன.
எஸ்ஐஆர் பணிகளுக்கு இண்டியா கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், எஸ்ஐஆர் பணிகள் வாக்குரிமையை பறிப்பதாக குற்றம்சாட்டி இண்டியா கூட்டணி சார்பில் 23 கட்சிகள், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளன.
இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,”ஜூன் 8 அன்று நடைபெற்ற இண்டியா கூட்டணி கூட்டத்தில் 21 அரசியல் கட்சிகளும் ஒரு சுயேச்சை உறுப்பினரும் பங்கேற்றனர். அப்போது எஸ்ஐஆர் மற்றும் தேர்தல் தொடர்பான பிற விவகாரங்கள் குறித்து தலைமை நீதிபதிக்கு ஒரு கூட்டுக் கடிதம் அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 23 அரசியல் கட்சிகள் மற்றும் ஒரு சுயேச்சை உறுப்பினரின் கையெழுத்துக்களுடன் கூடிய கூட்டுக் கடிதம் இன்று தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.
ஜூன் 8ஆம் தேதி நடந்த இண்டியா கூட்டணி கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி மற்றும் திமுக கட்சிகள் பங்கேற்கவில்லை. ஆனால், இப்போது அனுப்பப்பட்ட கடிதத்தில் இக்கட்சிகளும் கையெழுத்திட்டுள்ளன.
தமிழகத்தில் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்து ஆட்சியில் பங்கு பெற்ற காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியில் இருந்து விலகியது. இதனால், இண்டியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை. இந்த சூழலில், இண்டியா கூட்டணியின் முக்கிய கட்சிகள் மேற்கொண்ட தீவிர பேச்சுவார்த்தைகளின் விளைவாக, தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் திமுக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் கையெழுத்திட்டுள்ளன.
