விழுப்புரம் கோர்ட்டில் நடந்து வரும் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, அரசு தரப்பில் அவகாசம் கேட்டுள்ளனர்.

கடந்த தி.மு.க., ஆட்சியின்போது விழுப்புரம் மாவட்டம், பூத்துறை அரசு செம்மண் குவாரியில் ஏலம் விட்டு, அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து முறைகேடு நடந்ததாக அமைச்சர் பொன்முடி, மகன் கவுதமசிகாமணி, உட்பட 8 பேர் மீது 2012ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 67 பேர், அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டு, சாட்சிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. இதுவரை 51 பேர் சாட்சியம் அளித்துள்ள நிலையில், 30 பேர் அரசு தரப்புக்கு எதிராக பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.

வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கில் தொடர்புடைய ஜெயச்சந்திரன், கோபிநாதன், சதானந்தம், ராஜமகேந்திரன் ஆஜராகினர். அரசு தரப்பு சாட்சிகள் ஆஜராகவில்லை. அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, இந்த வழக்கில் இறுதி அறிக்கையாக, கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதால், அதற்கு அவகாசம் வழங்கும்படி கோரினார். நீதிபதி மணிமொழி, வழக்கின் விசாரணையை ஏப்ரல் 22க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal