‘‘நான் பாட்டுக்கு சிவனேனு தான்டா இருந்தேன்… உசுப்பேத்தி உசுப்பேத்தியே…’’ வடிவேலுவின் இந்த வசனம் யாருக்கு பொருந்துமோ பொருந்தாதோ… அ.தி.மு.க.வில் சீனியரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனுக்கு நன்றாக பொருந்தும் என்கிறார் மலைக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சீனியர் அ.தி.மு.க. நிர்வாகி!

‘செங்கோட்டையன் அந்த அளவுக்கெல்லாம் வொர்த் இல்லப்பா..?’ என பலமுறை அந்த சீனியர் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறிவருகிறாராம். இந்த நிலையில்தான், அதிமுக பொதுச்செயலாளர் செங்கோட்டையன் என திருமங்கலம், மதுரையில் ஒட்டியுள்ள போஸ்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன், அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். சட்டமன்ற தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எடப்பாடி இணங்காத பட்சத்தில் கட்சியை உடைக்கவும் முயற்சி செய்து வருகிறது. கூட்டணி தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை அமித் ஷா அழைத்துப் பேசியுள்ளார். இதேபோல, செங்கோட்டையனும் இருமுறை டெல்லிக்கு சென்று அமித் ஷாவை சந்தித்து பேசியுள்ளார். மேலும், முன்னாள் அதிமுக அமைச்சர்களும் நிர்மலா சீதாராமனை சந்தித்து வருகின்றனர். மேலும், ஒன்றிய பாஜ அரசு, செங்கோட்டையனுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளது.

இந்நிலையில், மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் பஸ் ஸ்டாண்ட், மறவன்குளம், இ.பி.ஸ்டாப் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மதுரை மாநகர் மாவட்ட மத்திய தொகுதி அதிமுக செயலாளர் மிசா செந்தில் என்பவரின் பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களுக்கு ஒய்.பிளஸ் பாதுகாப்பு வழங்கிய ஒன்றிய அரசுக்கு நன்றி, நன்றி, நன்றி என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி மற்றும் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ ஆகியோரது படங்கள் போஸ்டரில் இடம்பெற்றுள்ளன.

எடப்பாடி பழனிசாமியின் படம் இல்லை. மதுரை நகரிலும் இதேபோல பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருமங்கலம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக ஆர்.பி.உதயகுமார் உள்ளார். எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் இவர், எடப்பாடி பழனிசாமியுடன் மிகவும் நெருக்கமாக உள்ளார். இந்நிலையில், திருமங்கலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் செங்கோட்டையன் என ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கே.ஏ.செங்கோட்டையன் என்றைக்கோ ‘நாற்காலி’யை விட்டுவிட்டார். இனி எடப்பாடியிடம் இருந்து ஒரு ‘ஆணி’யைக் கூட பிடுங்க முடியாது என்கிறார்கள் செங்கோட்டையனுக்கு நெருக்கமானவர்களே?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal