‘அந்த ஆளு முதலமைச்சராக இருந்துகூட அறிவு இல்ல. அவ¬… நான்தான் போய் சமாதியில உட்காரச் சொன்னேன்’ என ஓ.பி.எஸ்.ஸை கடுமையான சொற்களால் ஒருமையில் பேசியவர்தான் ஆடிட்டர் குருமூர்த்தி. இந்த நிலையில்தான் தற்போது எடப்பாடி பழனிசாமியையும் கடுயை£க விமர்சித்திருக்கிறார்.
துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வாயை மூடிக் கொண்டிருப்பது நல்லது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி பற்றி பேசுவதை குருமூர்த்தி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ள ஜெயக்குமார், 2026 சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற முடிவு கட்சி எடுத்தது என்றும் தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பாக சென்னையில் துக்ளக் இதழின் 55வது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இந்த விழாவில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேசுகையில், ஊழலில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. ஆனால் அதிமுக தேச விரோத கட்சி அல்ல. வரும் தேர்தலில் பாஜகவும் அதிமுகவும் இணைய வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு அரசியல் தலைவருக்கான போக்கு இல்லை. ஏற்கனவே ஒருமுறை கையில் கிடைத்த வாய்ப்பை தவறவிட்டுவிட்டார். கடந்த தேர்தலில் கொஞ்சம் சமரசம் செய்து கொண்டு, பாஜகவுக்கு 10 அல்லது 12 சீட் கொடுத்திருந்தால், திமுகவுக்கு தனி பெரும்பான்மை கிடைத்திருக்காது. திமுகவை வீழ்த்த வேண்டும் என்று எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரிடமும் இருந்த உறுதி, எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை என்று காட்டமாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில் எம்ஜிஆரின் 108வது பிறந்தநாள் விழா அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு, கேக் வெட்டி சக நிர்வாகிகளுக்கு ஊட்டிவிட்டார். இதன்பின் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், துக்ளக் குருமூர்த்தி ஏற்கனவே எங்களிடம் நிறைய வாங்கி கட்டிக்கிட்டார். மீண்டும் மீண்டும் வாங்கி கட்டிக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாக வேண்டாம் என்று தான் தவிர்த்து வருகிறோம். அதனால் வாயை அடக்கிக் கொண்டு, குருமூர்த்தி அவரின் வேலையை மட்டும் செய்தால் போதும்.
2026ல் அதிமுக – பாஜக கூட்டணி இல்லை என்ற முடிவு கட்சியால் எடுக்கப்பட்டுவிட்டது. வருங்காலத்தில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற முடிவுக்கு கட்சி வந்துவிட்ட பிறகு, மீண்டும் குருமூர்த்தி பேச வேண்டிய அவசியம் கிடையாது. அதனால் அவர் வாயை மூடிக் கொண்டிருப்பது நல்லது என்று பதிலடி கொடுத்துள்ளார்.
தொடர்ந்து ஜெயக்குமார் பேசுகையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நியாயமாக நடக்குமா? இந்த இடைத்தேர்தலில் பணம் பாதாளம் வரை பாயும். தேர்தல் ஆணையம் இதனை கண்டு கொள்ளாது. அதிமுக எப்போதும் தேர்தலில் போட்டியிட அஞ்சுகிற இயக்கம் அல்ல. 2026 சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலினின் பாட்சா பலிக்காது என்று தெரிவித்துள்ளார்.