‘‘அழிவின் விளிம்பில் நிற்கும் அண்ணா திமுகவை காத்துக் கரை சேர்க்க மவுனம் கலைத்திருக்கிறார் மனித நேயர் சைதை துரைசாமி’’ என அரசியல் விமர்சகர் மருது அழகுராஜ் தனது வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதுதான் எடப்பாடியார் தரப்பை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

அதாவது, கடந்த சில மாதங்களாக, ஏன்… வருடங்களாகவே மவுனமாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த முன்னாள் மேயர் சைதை துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையை மையப்படுத்திதான் மருது அழகுராஜ் எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்.
எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி மனித நேயர் சைதை துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘சினிமாவை பொழுதுபோக்காக கருதிய காலத்தில், அதை போர்க்கருவியாக மாற்றி, மக்களுக்கு எம்.ஜி.ஆர்., விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.
‘‘ஆளும் வளரனும், அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி…, பதவி வரும்போது பணிவு வர வேண்டும் தோழா…’’ போன்ற எம்.ஜி.ஆரின் சினிமா பாடல்கள், இன்றைக்கும் பொருந்துகின்றன.
அ.தி.மு.க., உருவானபோது, அண்ணாதுரையின் வழியில் கட்சி விதிகளை உருவாக்கினார். ஆனால், 43வது விதியில் மட்டும், ‘‘அ..தி.மு.க., சட்ட திட்ட விதிகளை இயற்றவும், திருத்தவும், நீக்கவும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் உண்டு.
ஆனால், கட்சியின் பொதுச்செயலரை அடிப்படை உறுப்பினர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதியை மட்டும் மாற்றவோ, திருத்தவோ முடியாது’’ எனக் கூறப்பட்டிருந்தது.
இதுபற்றி, எம்.ஜி.ஆரிடம் நான் கேட்டபோது, அதற்கான காரணத்தை விளக்கினார். இதை நேரம் வரும்போது நிச்சயம் தொண்டர்களுக்கும், மக்களுக்கும் சொல்வேன். எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை, மனிதநேய நாளாக கொண்டாடி மகிழ்வோம்’’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தவிர, ‘‘அன்னமிட்ட தலைவன் வழியில் அம்மா உணவகம் அமைக்க அம்மாவுக்கு துணை நின்ற ஆற்றலாளர்! மேயர் பதவிக்கே மேன்மை சேர்த்த நேர்மையானர்’ மவுனம் கலைத்திருப்பதுதான், எடப்பாடியின் தூக்கத்தை கலைத்திருக்கிறது’ என சூசகமாக பதிவிட்டிருக்கிறார் மருது அழகுராஜ்!