பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவின் தலைவராக ஆளுநர் பரிந்துரைப்பவரும், உறுப்பினராக யுஜிசி பரிந்துரைப்பவரும் இருப்பார்கள் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை, வேந்தரான ஆளுநரே முடிவு செய்வார் என்று யுஜிசி வெளியிட்டுள்ள வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுக்கான பிரதிநிதித்துவம் அளிக்கப்படாத நிலையில், ஆளுநர்தான் துணை வேந்தரை முடிவு செய்யும் இடத்தில் இருப்பார் என்று கூறப்படுகிறது.

யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு, UGC (பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஊழியர்களின் நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கான குறைந்தபட்ச தகுதிகள் மற்றும் உயர்கல்வியில் தரநிலைகளை பராமரிப்பதற்கான நடவடிக்கைகள்) வரைவு விதிமுறைகள், 2025-ஐ நேற்று (ஜனவரி 6) வெளியிட்டது. இதில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் குறித்து கல்வியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கருத்துகள்/ பரிந்துரைகளைத் தெரிவிக்கலாம் என்று யுஜிசி அழைப்பு விடுத்துள்ளது.

இதில் துணை வேந்தர் நியமனம் குறித்த புதிய பரிந்துரைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்படி, பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவின் (Search- cum- Selection Committee) தலைவராக ஆளுநர் பரிந்துரைப்பவரும், உறுப்பினராக யுஜிசி பரிந்துரைப்பவரும் இருப்பார்கள் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.

மற்றொரு உறுப்பினராக பல்கலைக்கழக சிண்டிகேட் அல்லது செனட் அல்லது நிர்வாகக் குழு அல்லது மேலாண்மை உறுப்பினர் பரிந்துரைப்பவர் இருப்பார் என்றும் யுஜிசி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரைவு அறிக்கை அமலாகும் பட்சத்தில், மாநில அரசு பரிந்துரைக்கும் உறுப்பினர், துணை வேந்தர் தேடுதல் குழுவில் இனி இடம்பெற முடியாது. அதேபோல மத்திய அரசு தீர்மானிக்கும் நபரே துணை வேந்தராக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே தமிழகத்தில் துணை வேந்தர் நியமனத்துக்கான தேடுதல் குழு நியமிப்பதில் ஏற்பட்ட பிரச்சினையால், 6 பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் பணியிடம் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal