ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தேர்தல் சமயத்தில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற தமிழக அரசு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி உள்ளது. மேலும் சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வுகளால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக நேற்று முன் தினம் பெ சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற கவனம் செலுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து மற்றும் மின்சார ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆனால் இந்த அறிவிப்புகள் ஏதும் ஆளுநர் உரையில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என்றும் கூறியுள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழக அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களையும், அதன் செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து ஆளுநர் உரையில் குறிப்பிட்டுள்ளது. தமிழக அரசு பல தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தாலும், நிறைவேற்றப்படாத பல முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்ற வேண்டுமென பெரும் எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது.

குறிப்பாக, சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வுகளால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். சிறு-குறு தொழில் முனைவோர்கள் மத்தியில் பெரும் பிரச்சனையாக உருவாகியுள்ள மின்சார நிலைக்கட்டணத்தை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். நீதிமன்ற தீர்ப்புகளை காரணம் காட்டி ஏழை, எளிய மக்களின் குடியிருப்புகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். கோவில் நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். அதுபோல அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து மற்றும் மின்சார ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்த அறிவிப்புகள் ஏதும் ஆளுநர் உரையில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற தமிழக அரசு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சிபிஎம் முன்னாள் செயலாளர் கே பாலகிருஷ்ணன், அண்மையில் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தில் நடக்கும் திமுக ஆட்சியில் மக்களுக்காக செயல்படுத்த வேண்டிய திட்டங்களை தடையின்றி செயல்படுத்த வேண்டும். ஆனால், கிராமத்தில் பட்டா கேட்டு சிறு இயக்கம் நடத்தினாலும், தெருமுனை கூட்டம் என்றாலும், போலீஸ் தடை போட்டு வழக்கு போடுகிறது. முதல்வரை இந்த மாநாட்டின் வாயிலாகக் கேட்கிறேன். தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளீர்களா?” என காட்டமாக பேசினார். பாலகிருஷ்ணனின் இந்த பேச்சை திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியும் விமர்சித்து இருந்தது. இந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள மாநில செயலாளரும் திமுக அரசை விமர்சித்தது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal