‘யார் அந்த சார்’ என்ற வாசகத்தை வைத்துக்கொண்டு தி.மு.க.வை அதி.மு.க. அலறவிட்டுக்கொண்டிருந்த நிலையில், ‘கோடநாடு எஸ்டேட்டில் சிசிடிவியை ஆஃப் செய்யச் சொன்ன அந்த சார் யாருங்கிறதையும் கேளுங்கப்பா’ என கேள்வி எழுப்பிய ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் அ.தி.மு.க.வை அலறவிட்டுக்கொண்டிருக்கிறார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் 23 ஆம் தேதி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அப்போது அவரை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்த அந்த நபர் , அந்த மாணவியிடம் ஒரு சாருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என மிரட்டினாராம்.

இதுகுறித்து அந்த மாணவி தனது எஃப்ஐஆரில் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் ஒருவர் மட்டும் கைதான நிலையில் யார் அந்த சார் என்ற கேள்வி எழுகிறது. இதை அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் எழுப்பி வருகின்றன. யார் அந்த சார் என ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு வைரலாகி வருகிறது. இந்த நிலையில் யார் அந்த சார் என கேட்டு அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

மேலும் தமிழக சட்டசபைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் யார் அந்த சார் என்ற பேட்ஜ் அணிந்து கொண்டு வந்தனர். அங்கும் யார் அந்த சார் என்ற கோஷம் ஒலித்தது. இந்த நிலையில்தான் ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் ஒரு கேள்வி எழுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: கொடநாடுல சிசிடிவியை ஆஃப் செய்யச் சொன்ன அந்த சார் யாருங்கிறதையும் கேளுங்கப்பா என கேள்வி எழுப்பியுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் கொடநாடு எஸ்டேட் உள்ளது. இது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவருடைய தோழி சசிகலாவுக்கு சொந்தமானது. கோடை காலத்தில் இந்த எஸ்டேட் மினி தலைமைச் செயலகம் போல் செயல்படும். கோடை காலங்களில் ஜெயலலிதா, கொடநாடு எஸ்டேட்டிற்கு சென்றுவிடுவார். இந்த கொடநாட்டில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

இதை தடுக்க வந்த காவலாளி பகதூர் சிங் கொலை செய்யப்பட்டார். இந்த எஸ்டேட்டில் 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. அது போல் எல்லா இடங்களிலும் சிசிடிவி காட்சிகள் இயங்கி வந்தது. ஆனால் கொலை, கொள்ளை சம்பவத்தின் போது இங்கு திடீரென மின் தடை ஏற்பட்டது. மேலும் சிசிடிவி கேமராக்களும் ஆஃப் செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு பிறகு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ் தற்கொலை, ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் சிக்கி பலியானார். இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி கோரி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் நீலகிரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீலகிரி நீதிமன்றம், எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதியளித்ததுடன், மற்றவர்களை விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்தனர்.

அதில், ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின் நடந்த கொள்ளையில், கோடநாடு எஸ்டேட்டில் இருந்து காணாமல் போன பொருட்கள் எவை என்பது பற்றி சசிகலா, இளவரசிக்கு தான் தெரியும். புலன் விசாரணைக் குழு, வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளவில்லை என குறிப்பிட்டிருந்தனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal