வருகிற 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி 25 இடங்களில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கிறது. இதுதான் தி.மு.க. தலைமைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது.

வி.சி.க.வில் இருந்து ஆதவ் அர்ஜுனா நீக்கப்பட்ட பிறகு மீண்டும் ‘லைம் லைட்’டிற்கு வந்திருக்கிறார் வன்னி அரசு. அவர் ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டியில்,

‘‘1999-ல் விசிக தேர்தல் பாதைக்கு வந்த​போதே ‘எளிய மக்களுக்​கும் அதிகாரம், கடைசி மனிதனுக்​கும் ஜனநாயகம்’ எனச் சொன்​னார் திரு​மாவளவன். இதுதான் 2016-ல் ‘ஆட்​சி​யிலும் பங்கு, அதிகாரத்​தி​லும் பங்கு’ என்ற எங்கள் கோட்​பாடாக மாறியது. இதைத்​தான் ஆதவ் அர்ஜு​னா​வும் பேசி​னார். இதைத்​தான், “ஆதவ்​வின் இந்த கருத்து தவறான கருத்து இல்லை. கட்சி​யின் நிலைப்​பாடு தான்” என்று தலைவரும் சொன்​னார். அந்த நிலைப்​பாட்​டில் விடுதலை சிறுத்​தைகள் எப்போதும் உறுதியாக இருக்​கிறோம்​.

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் ‘இதையெல்​லாம் பேசவேண்​டாம்’ என தலைவர் சொன்னதை மீறி புத்தக வெளி​யீட்​டில் அவர் பேசி​னார். அப்படி கட்டுப்​பாட்டை மீறிய​தால் தான் அவர் சஸ்பெண்ட் செய்​யப்​பட்​டார் ஆதவ் அர்ஜுனா. பொதுவாக கட்சியி​லிருந்து இப்படி இடைநீக்கம் செய்​யப்​படு​பவர்கள் அதுகுறித்து விளக்​கமளிப்​பார்​கள். அதை உயர்​மட்​டக்​குழு பரிசீலித்து மீண்​டும் இணைத்​துக் கொள்​ளப்​படு​வார்​கள். ஆனால், அதற்கான வாய்ப்பை ஆதவ் அர்ஜுனா உருவாக்க​வில்லை. விலகு​வதாக அறிவித்து விட்​டார். அவர் விலகியது வருத்த மளிக்​கக்​கூடியது​தான்​’’ என்று கூறியிருக்கிறார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்த கேள்விக்கு, ‘‘​விசிக-​வின் இந்தப் பயணம் சாதா​ரண​மானது அல்ல. குரு​தி​யாற்றை கடந்து பயணித்து இந்த இடத்தை அடைந்​திருக்​கிறோம். இப்போது நாங்கள் வலிமைமிக்க அங்கீகரிக்​கப்​பட்ட கட்சி​யாகி​யிருக்​கிறோம். இப்போது தமிழகத்​தின் திசைவழியை தீர்​மானிக்​கும் சக்தியாக உள்ளோம். 10 ஆண்டு​களுக்கு முன்பு விசிக-வை கூட்​ட​ணி​யில் சேர்த்​தால், தலித் அல்லாதவர்கள் வாக்​களிக்க மாட்​டார்கள் என்ற எண்ணவோட்டம் இருந்​தது.

அதனை மாற்றி இப்போது விசிக இருக்​கும் கூட்​ட​ணியே வெற்றி​பெறும் என்ற சூழலை உருவாக்கி​யுள்​ளோம். 2026-ல் திமுக கூட்​ட​ணி​யிலேயே தொடர்​வோம் என திரு​மாவளவன் கூறி​யுள்​ளார். என்னைப்​போன்ற கடைநிலை தொண்​டர்​களின் மனநிலை என்னவென்​றால், 2026-ல் 25 தொகு​திகளை கேட்டுப் பெறவேண்​டும், இது நமது கட்சிக்கான சரியான நேரம் என எண்ணுகிறோம்​.

விசிக-வில் உள்ள அனைவரின் விருப்பமுமே எங்கள் தலைவரை முதல்வராக்க வேண்டும் என்பதுதான். எதார்த்த சுழலில் ஒரு தலித் முதல்வராக முடியாது என எங்கள் தலைவர் சொல்கிறார். ஆனால், இன்று அவரை தலித் தலைவராக பார்க்காமல், பொதுத்தலைவராக மக்கள் பார்க்கத் தொடங்கிவிட்டனர். எனவே, அவருக்கான உயரத்தை அடையவைக்க நாங்கள் இன்னும் அதிகம் உழைக்க வேண்டியுள்ளது, அதற்காக உழைக்க ஆரம்பித்துவிட்டோம்’’ என்று கூறியிருக்கிறார்.

தி.மு.க.வின் மீது ஏற்கனவே ஆதவ் அர்ஜுனா இறக்கிய குண்டைத் தான் வன்ன¤ அரசும் வீசியிருக்கிறார். ஆதவ் அர்ஜுனாவால்தான் இன்றைக்கு தமிழகத்தில் வி.சி.க. என்ற கட்சி தினந்தோறும் விவாதங்களில் பேசப்படுகிறது என்பதையும் வி.சி.க.வினர் விரைவில் உணர்வார்கள்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal