நடந்து முடிந்த நாடாளுமன்றத் டெபாசிட்டை இழக்குமளவுக்கு அதிமுக-வின் செல்வாக்கு சரிந்த போதும் யார் மீதும் கைவைக்க முடியாத இக்கட்டில் இருக்கிறார் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி. மதுரையில் அடிதடி நடந்தும் செல்லூர் ராஜு மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. அதன் உச்சமாக, மாவட்டச் செயலாளரை மாற்றக் கோரி திருச்சி மாநகரின் 35 வட்டச் செயலாளர்கள் கையெழுத்திட்டு பழனிசாமியிடமே மனு கொடுத்திருக்கிறார்கள்.
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த வெல்லமண்டி நடராஜன் ஓபிஎஸ் பின்னால் சென்ற பிறகு அந்தப் பதவி ஆவின் கார்த்திகேயனுக்கே கிடைக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு மாறாக, தினகரன் பக்கம் போய்விட்டு திரும்பிய ஜெ.சீனிவாசனை அந்தப் பதவியில் அமர்த்தினார் இபிஎஸ். இதன் பின்னணியில் எடப்பாடியின் ‘நிழல்’ இருப்பதாகவும் ஒரு தகவல்!
திருச்சியில் சீனியர்கள் இருக்கையில், ஜூனியருக்கு மா.செ.பதவி கொடுத்தது உண்மையான அதிமுகவிசுவாசிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. திமுக-வில் இருந்து வந்த நசீமா ஃபாரிக் என்பவரை சீனிவாசன் மாநகர் மாவட்ட மகளிரணி செயலாளர் ஆக்கியதும் அதிருப்தி கோஷ்டியை ஆத்திரப்பட வைத்தது.
இதுகுறித்தெல்லாம் கட்சித் தலைமைக்கு தொடர்ச்சியாக புகார்களை அனுப்பிய நிலையில், முன்னாள் அமைச்சர் தங்கமணி கள ஆய்வுக் கூட்டத்துக்கு வந்த போது அவரது எதிரிலேயே இரண்டு கோஷ்டிகளாக மோதிக் கொண்டனர். நொந்து போன தங்கமணி, “இப்படி நமக்குள்ளேயே சண்டை போட்டுக் கொண்டிருந்தால் எதிர்க்கட்சியாகவே இருக்க வேண்டியது தான்” என்று சொல்லிவிட்டுப் போனார்.
இதையே துருப்பாக வைத்து சீனிவாசனின் பதவிக்கு வேட்டுவைக்க கையெழுத்து இயக்கம் தொடங்கியது எதிர்க்கோஷ்டி. மாநகர் மாவட்ட ஜெ பேரவை செயலாளரான ஆவின் கார்த்திகேயன் இதன் பின்னணியில் இருப்பதாக ஒரு பேச்சு ஓடியது. இந்த நிலையில், சீனிவாசனை நீக்க வலியுறுத்தி 35 வட்டச் செயலாளர்கள் பழனிசாமியிடம் சேலத்துக்கே சென்று மனு கொடுத்திருக்கிறார்கள்.
இக்குற்றச்சாட்டுக்கள் குறித்து மாநகர் மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தரப்போ, “ஆவின் கார்த்திகேயன் சென்னை அண்ணாநகரில் வீடு வாங்கி அங்கு குடியேறிவிட்டார். இங்கு வருவதே இல்லை. கட்சியின் திட்டமிட்டு சிலர் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். நசீமா ஃபாரிக் வெல்லமண்டி நடராஜன் காலத்திலிருந்தே அதிமுக-வில் பொறுப்பில் இருக்கிறார். துணை பொறுப்பிலிருந்த அவருக்கு செயலாளர் பொறுப்பு இயல்பாகவே வந்துள்ளது” என்றார்.
ஆவின் கார்த்திக் கேயன் தரப்போ, “யாரையும் காலி செய்துவிட்டு நான் பதவி வாங்க வேண்டியதில்லை. மாநகர் மாவட்டச் செயலாளரை மாற்றக்கோரி நான் யாரிடமும் கையெழுத்து வாங்கவில்லை. என் மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்பதற்காக இப்படியான தகவலை சிலர் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றனர். எனக்கு அது வேலையில்லை’’ என்றனர்.வேலையைச் செய்ய மாட்டேன்” என்றார்.
திருச்சி மலைக்கோட்டை அ.தி.மு.க.வில் உண்மையான ரத்தத்தின் ரத்தங்களிம் பேசினோம். ‘‘சார், சீனிவாசன், ஆவின் கார்த்திகேயன் இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. இருவருமே ஆளும் கட்சி மந்திரியுடன் தொடர்பு வைத்துக்கொண்டு தங்களது தேவைகளை இதுநாள் வரை பூர்த்தி செய்து கொண்டு வருகின்றனர்.
ஆவின் கார்த்திகேயன் திருச்சியில் சுமார் 50 கோடி ரூபாய்க்கும் மேல் பிரம்மாண்ட வீடு கட்டியிருக்கிறார். அமைச்சர்களாக இருந்தவர்கள் கூட அப்படி வீடு கட்ட முடியவில்லை. சில வட்டச் செயலாளர்களுக்கு மாதம் மாதம் சம்பளம் கொடுத்து வைத்திருக்கிறார் ஆவின் கார்த்திகேயன். நேற்று கூட தலைமைக் கழகத்திற்கு வந்து மனு கொடுத்திருக்கிறார்கள். இப்படி ஆவின் கார்த்திகேயன் மறைமுகமாக உள்ளடி வேலை பார்க்கும் நிலையில், அவரது தம்பி அரவிந்தன் நேரடியாகவே உள்ளடி வேலைகளில் இறங்கியிருக்கிறார்.
சீனிவாசனுக்கு எதிராக வட்டச் செயலாளர்களை சேலத்திற்கு அழைத்துச் சென்றது ஆவின் கார்த்திகேயனின் தம்பி அரவிந்தன்தான். இதே போல் முன்னாள் எம்.பி.குமார் மாவட்டச் செயலாளராக இருந்தபோதும் அவருக்கு எதிராக ஆவின் கார்த்திகேயன் உள்ளடி வேலை பார்த்தார். இதே நிலை நீடித்தால் மீண்டும் மலைக்கோட்டை தி.மு.க. வசம் சென்றுவிடும்’’ என்றவர்கள் அடுத்து சொன்னதுதான் அதிர்ச்சி ரகம்.
‘‘சார், மறைந்த அம்மா (ஜெயலலிதா) இருக்கும் போது திருச்சி மாநகர் மற்றும் திருச்சி புறநகர் இரண்டு மாவட்டப் பொறுப்புகளையும் வகித்து, உள்ளடி வேலைகளுக்கு இடம் கொடுக்காமல் கட்சியை வழிநடத்திச் சென்றவர் முன்னாள் அரசு கொறடா மனோகரன். அவர் இருக்கும்போது அ.தி.மு.க. அன¬த்து தொகுதிகளிலும் வெற்றியும் பெற்றது. ஆனால், இப்போது சீனியர்களை மதிக்காமல் குறுக்கு வழியில் சென்று பதவியை வாங்கிவிடுவதால்தான் இவ்வளவு பிரச்னை. எடப்பாடி பழனிசாமி இனியும் மவுனம் காத்தால் திருச்சியை மறந்துவிட வேண்டியதுதான்’’ என்றனர்.
ராணுவ கட்டுப்பாட்டுடன் இருந்த அதிமுக இப்போது இப்படி ஆகிவிட்டதே…!