சமீபத்தில்தான் அ.தி.மு.க. பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுக்கு உற்சாகத்தை கொடுத்த அடுத்த சில நாட்களிலேயே திருச்சி அ.தி.மு.க.வில் வெடித்த மோதல்தான் எடப்பாடிக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் டெபாசிட்டை இழக்குமளவுக்கு அதிமுக-வின் செல்வாக்கு சரிந்த போதும் யார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாமல் இருக்கிறார் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி. அதனால் ஆங்காங்கே அதிமுக-வுக்குள் அடிதடிகள் அரங்கேறுகின்றன. அதன் உச்சமாக, மாவட்டச் செயலாளரை மாற்றக் கோரி திருச்சி மாநகரின் 35 வட்டச் செயலாளர்கள் கையெழுத்திட்டு பழனிசாமியிடமே மனு கொடுத்திருக்கிறார்கள்.

​திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த வெல்லமண்டி நடராஜன் ஓபிஎஸ் பின்னால் சென்ற பிறகு அந்தப் பதவி அப்போதைய மாநகர் மாணவரணி செயலா​ளரும் இபிஎஸ் ஆதரவாள​ருமான ஆவின் கார்த்தி​கேயனுக்கே கைகூடும் என அவரது ஆதரவாளர்கள் எதிர்​பார்த்​தனர். ஆனால் அதற்கு மாறாக, தினகரன் பக்கம் போய்விட்டு திரும்பிய ஜெ.சீனி​வாசனை அந்தப் பதவியில் அமர்த்தினார் (இந்தப் பின்னணியில் எடப்பாடியின் ‘நிழல்’ இருக்கிறார் என்கிறார்கள்) இபிஎஸ். அப்போதே சீனிவாசனுக்கு எதிராக சிலர் சிணுக்க ஆரம்பித்​தார்கள். போதாதுக்கு, திமுக-வில் இருந்து வந்த நசீமா ஃபாரிக் என்பவரை சீனிவாசன் மாநகர் மாவட்ட மகளிரணி செயலாளர் ஆக்கியதும் அதிருப்தி கோஷ்டியை ஆத்திரப்பட வைத்தது.

இதுகுறித்​தெல்லாம் கட்சித் தலைமைக்கு தொடர்ச்​சியாக புகார்களை அனுப்பிய நிலையில், முன்னாள் அமைச்சர் தங்கமணி கள ஆய்வுக் கூட்டத்​துக்கு வந்த போது அவரது எதிரிலேயே இரண்டு கோஷ்டிகளாக மோதிக் கொண்டனர். நொந்து போன தங்கமணி, “இப்படி நமக்குள்ளேயே சண்டை போட்டுக் கொண்டிருந்தால் எதிர்க்​கட்​சியாகவே இருக்க வேண்டியது தான்” என்று சொல்லி​விட்டுப் போனார்.

இதையே துருப்பாக வைத்து சீனிவாசனின் பதவிக்கு வேட்டு​வைக்க கையெழுத்து இயக்கம் தொடங்​கியது எதிர்க்​கோஷ்டி. மாநகர் மாவட்ட ஜெ பேரவை செயலாளரான ஆவின் கார்த்தி​கேயன் இதன் பின்னணியில் இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், சீனிவாசனை நீக்க வலியுறுத்தி 35 வட்டச் செயலா​ளர்கள் பழனிசாமி​யிடம் சேலத்​துக்கே சென்று மனு கொடுத்​திருக்​கிறார்கள்.

திருச்சி அ.தி.மு.க.வில் வெடித்த மோதல் குறித்து நடுநிலையான மூத்த ரத்தத்தின் ரத்தங்களிடம் பேசினோம். ‘‘சார், திருச்சிக்கு இப்போதுதான் 3 மா.செ.க்கள். அம்மா (ஜெயலலிதா) இருக்கும்போது முன்னாள் அமைச்சர்கள் கே.கே.பி, என்.ஆர்.சிவபதி, முன்னாள் அரசு கொறடா மனோகரன் ஆகியோர் ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கு மாவட்ட செயலாளர்களாக இருந்தார்கள். அப்போது, இந்தளவிற்கு உள்குத்து அரசியல் நடக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் மனோகரன் திருச்சி மாநகர் மற்றும் புறநகர் இரண்டு மாவட்டங்களையும் கவனித்து வந்தவர்தான்.

அம்மாவின் மறைவிற்குப் பிறகுதான் திருச்சி அ.தி.மு.க. மட்டுமில்லை பிற மாவட்டங்களிலும் உள்குத்து அதிகரித்திருக்கிறது. காரணம், எடப்பாடி பழனிசாமியின் நிழாலாக வலம் வருபவரை சந்தித்து தகுதியில்லாவிட்டாலும் பதவியை வாங்கிவிடுகிறார்கள். இதனால், நெடுங்காலமாக இருக்கும் அ.தி.மு.க. நிர்வாகிகள் மனசோர்வு அடைகின்றனர்.

ஜெயலலிதா இருக்கும்போது யார் என்றே தெரியான கார்த்திகேயன், ஜெ. மறைவிற்குப் பிறகு ‘ஆவின்’ கார்த்திகேயன் என்ற அடைமொழியோடு, தமிழகத்தில் டாப் அதிகாரிகள் முதற்கொண்டு முக்கியமான டெண்டர் வரை இவர் கண்ணசைவில்தான் நடந்தது. இன்னும் சொல்லப்போனால் அப்போதே இவருக்கு எதிராக ஒரு பிரச்னை வெடித்தபோது, எடப்பாடியே திருச்சிக்கு வந்து சமரசம் செய்து மீண்டும் கார்த்திகேயனை பதவியில் அமர்த்னார் என்பதையும் மறுக்க முடியாது & மறக்க முடியாது. இன்றைக்கு அமைச்சர்களால் கூட கட்டமுடியாத அளவிற்கு திருச்சி தில்லை நகரில் ரூ.100 கோடி ரூபாய்க்கும் மேல் வீடு கட்டிக் கொண்டிருக்கிறார். இவருக்கு மா.செ. பதவி கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் தனது தம்பியின் மூலமாக மற்றவர்களுக்கு குடைச்சல் கொடுக்கிறார்.

இவரது தம்பி அரவிந்தனும், எடப்பாடி பழனிசாமி மகனும் ஒரே வகுப்பில் படித்தவர்கள் என்பதால்தான், இந்தளவிற்கு நெருக்கம். இந்தளவிற்கு வளர்ச்சி. கட்சியில் இதனை தவறாக பயன்படுத்தி வருகிறார் கார்த்திகேயன்.

தவிர, இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் மலைக்கோட்டை மன்னனாக வலம் வருபவரிடம் அ.தி.மு.க. மா.செ.க்கள் முதல் ஒ.செ.க்கள் வரை விலை போனதுதான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. திருச்சியிலும், பெரம்பலூர் தொகுதியிலும் தோல்வியைத் தழுவியது. திருச்சி மா.செ.க்கள் மற்றும் ஆவின் கார்த்திகேயன், உறையூர் பகுதி செயலாளர் ஆகியோர் ‘மலைக்கோட்டை மன்னருக்கு’ இன்னும் நெருக்கமாகவும் விசுவாசமாகவும் இருக்கிறார்கள். இதையெல்லாம் எடப்பாடி கண்டுகொள்ளாமல் இருந்தால் வரும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க படுதோல்வியைச் சந்திக்கும்.

பெரம்பலூர் தொகுதியில் மலைக்கோட்டை மன்னரின் வாரிசு போட்டியிட்டது. சொல்லவா வேண்டும் அத்தொகுதிக்கு ‘விட்டமின்’ வாரி வழங்கப்பட்டது.

அதே போல் பாரிவேந்தரும் தனது பெயருக்கேற்றாற் போல் வாரி வழங்கினார். ஆனால், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கூட 200 ஸ்வீட் பாக்ஸ் கொடுத்த அ.தி.மு.க., நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு பைசா கொடுக்காமல் இரண்டாம் இடத்தை பிடித்தது. அதாவது ‘பாரி’வேந்தரையே மூன்றாம் இடத்திற்கு தள்ளினார்கள் மக்கள். காரணம். அங்கு போட்டியிட்டவர் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த வேட்பாளர். ஆனால், அ.தி.மு.க.வின் நிர்வாகிகள் மலைக்கோட்டை மன்னரிடம் விலைபோன நிலையிலும், அடிமட்டத் தொண்டர்களும், சமுதயாத்தைச் சேர்ந்தவர்களும் விலைபோகமல் இருந்ததுதான் இதற்கு காரணம்! இந்த நிலையில்தான் திருச்சி அ.தி.மு.க.வில் மீண்டும் மோதல் வெடித்துள்ளது.

திருச்சிக்கு பொறுப்பாக இருக்கும் தங்கமணி கண்ணை மூடிக்கொண்டிருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் ‘தங்கமணிக்கு நான் நெருக்கம்’ என சொல்லிக்கொண்டே சில நிர்வாகிகள் மலைக்கோட்டை மன்னருக்கு நெருக்கமாக இருக்கிறார்கள். இதையெல்லாம் தங்கமணி கண்டும் காணாமலும் இருக்கலாம். ஆனால், எடப்பாடி கண்டும் காணாமலும் இருந்தால், அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கம் காணாமல் போய்விடும்’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal