‘‘வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு நடைமுறைகள் முடிந்த பிறகே உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும்’’ என சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

2019ல் நடத்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம், வரும் 2025 ஜன., 5ம் தேதியுடன் முடிவடைகிறது. மேலும், 2021ல் நடத்தப்பட்ட மாவட்ட ஊரக உள்ளாட்சிகள் பதவிக் காலம், 2026 செப்., மாதம் முடிவடைகிறது. இந்நிலையில், ஊரக உள்ளாட்சிகளுக்கு ஒருங்கிணைந்த தேர்தல் நடத்தப்படுமா அல்லது பதவிக் காலம் முடிவடைந்த 27 மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படுமா என்ற குழப்பம் நிலவி வருகிறது.

வார்டு எல்லை மறுவரையறை பணிகள் நடந்து வரும் நிலையில், பணிகளை விரைந்து முடித்து தேர்தல் தேதியை அறிவிக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று (டிச.,21) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில்,’ வார்டு மறு வரையறை மற்றும் மதிப்பீட்டு பணிகள், பட்டியல் இனத்தனர், பழங்குடியினர் மற்றும் மகளிருக்கான இட ஒதுக்கீது குறித்து முடிவு செய்யாமல், உள்ளாட்சி தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தமிழக அரசின் உத்தரவாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் தனபால் அடங்கிய அமர்வு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.

ஏற்கனவே ‘தமிழக அரசியல்’ வார இதழில் உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா? என வெளிவந்த கவர்ஸ்டோரில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த கள நிலவரங்களையும், அரசியல் நிலவரங்களையும் விரிவாக விளக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal