‘‘தம்பி வா.. தலைமையேற்க வா… அண்ணாவிடம் கடன் வாங்கி அண்ணன் வாழ்த்துகிறேன்’’ என்றும், உதயநிதி பேரீச்சம்பழம் போல மென்மையானவர். ஆனால், அதன் விதையைப்போல உறுதியானவர் என்றும் கூறி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது 47 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். கலைஞர் நினைவிடத்தில் பணிபுரியும் 100க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.

உதயநிதியின் பிறந்த நாளையொட்டி, அவருக்கு அரசியல் கட்சியினர், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தம்பி வா தலைமையேற்க வா.. அண்ணாவிடம் கடன் வாங்கி அண்ணன் வாழ்த்துகிறேன் என்றும், உதயநிதி பேரீச்சம்பழம் போல மென்மையானவர். ஆனால், அதன் விதையைப்போல உறுதியானவர் என்றும் கூறி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, கவிஞர் வைரமுத்து எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: ஒருநாள் கலைஞரும் நானும் கோபாலபுரத்தில் உரையாடிக் கொண்டிருந்தோம். உதயநிதி தன் மனைவி கிருத்திகாவோடு வந்தார்; நின்றுகொண்டே பேசினார். கலைஞர் மறுத்த ஒருகருத்தை தன் வாதத்தை முன்னிறுத்திச் சாதித்துச் சென்றார் அப்போதே தெரிந்து கொண்டேன். வலிவும் தெளிவும் மிக்க வல்லவர் இவரென்று. உதயநிதி பேரீச்சம் பழம்போல் மென்மையானவர்; ஆனால் அதன் விதையைப்போல் உறுதியானவர் சின்னச் சின்ன எதிர்ப்புகள் இவரைச் சிதைப்பதில்லை. குன்றிமணி முட்டிக் குன்றுகள் சாய்வதில்லை. காலம் இவரை மேலும் மேலும் செதுக்கும்; புதுக்கும்.

“தம்பீ வா தலைமையேற்க வா” அண்ணாவிடம் கடன்வாங்கி அண்ணன் வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal