அதானி ஊழல் விவகாரம் மற்றும் மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன..!
அதானி ஊழல் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் விவாதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பினர். இதனால் லோக்சபா முடங்கியது. இதனைத் தொடர்ந்து லோக்சபா நடவடிக்கைகளை பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா. இதேபோல ராஜ்யசபாவிலும் அதானி விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ராஜ்யசபா நடவடிக்கைகள் முதலில் காலை 11.30 மணி வரையிலும் பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்திய மாநிலங்களின் மின்சார வாரியங்களுக்கு லஞ்சம் கொடுத்து மத்திய அரசு நிறுவனத்திடம் இருந்து ஒப்பந்தங்களைப் பெற்றது அதானி நிறுவனம்; இந்த லஞ்சம் கொடுத்த விவகாரத்தை மறைத்து அதானி குழுமமானது அமெரிக்க முதலீடுகளைப் பெற்றது என்பது வழக்கு. இந்த வழக்கில் அதானி உள்ளிட்டோருக்கு எதிராக அமெரிக்கா நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
அதானி குழுமத்தின் இந்த ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை. இந்த நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே அதானி ஊழல் குறித்து இரு சபைகளிலும் விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்திருந்தனர்.
அதேபோல மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்கவும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தங்கர் இவற்றை நிராகரித்தனர். இதனால் இரு சபைகளிலும் முதல் நாள் நடவடிக்கைகள் முடங்கின. இதனால் சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. மேலும் அரசியல் சாசன நாள் நிகழ்வுகளில் நேற்று எம்.பிக்கள் பங்கேற்றிருந்தனர்.
இந்த நிலையில் இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் 3-வது நாள் கூட்டம் முற்பகல் 11 மணிக்கு தொடங்கியது. லோக்சபாவிலும் ராஜ்யசபாவிலும் அதானி ஊழல் முறைகேடு குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் முழக்கங்களை எழுப்பினர். இதனால் இரு சபைகளும் அமளிக்காடாகின. இதனைத் தொடர்ந்து லோக்சபா பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் ராஜ்யசபா நடவடிக்கைகள் காலை 11.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மேலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கொடுத்திருந்த 18 தீர்மான நோட்டீஸ்களையும் ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர் நிராகரித்தார். முற்பகல் 11.30 மணிக்கு ராஜ்யசபா மீண்டும் கூடிய போதும் அமளி நீடித்ததால் சபை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து எதிர்க்கட்சிகளால் முடக்கப்பட்டு வருகின்றன.