அதானி ஊழல் குற்றச்சாட்டு நெருக்கடியை கையாள இந்தியா – அமெரிக்கா இடையேயான வலுவான உறவு உதவும் என வெள்ளை மாளிகை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

2020-24 காலகட்டத்தில் அதிக விலைக்கு சூரிய ஒளி (சோலார்) மின்சாரம் வாங்கும் வகையில் விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக தமிழகம், ஆந்திரா, ஜம்மு – காஷ்மீர், சத்தீஸ்கர், ஒடிசா மாநிலங்களில் அரசு அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும், இதை மறைத்து அமெரிக்க நிறுவனங்களிடம் முதலீடு பெற்றதாகவும் அதானி குழுமம் மீது நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் பெடரல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அக்குழுமத்தின் தலைவர் கவுதம் அதானிக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தான், அதானி ஊழல் குற்றச்சாட்டு நெருக்கடியை கையாள இந்தியா – அமெரிக்கா இடையேயான வலுவான உறவு உதவும் என வெள்ளை மாளிகை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜீன் பியர் கூறுகையில், “அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளை நாங்கள் அறிவோம். இந்த விவாகரத்தை முறைப்படி பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம், நீதித்துறை நேரடி மேற்க்பார்வையில் விசாரிக்கும். நான் இத்தருணத்தில் என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால், இந்தியாவுக்கும் – அமெரிக்காவுக்கும் இடையேயான உறவு வலுவான அடித்தளம் கொண்டது. மேலும், இரு நாட்டு மக்களுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. இவை இவ்விவகாரத்தை வழிநடத்திச் செல்ல உதவும் என நம்புகிறேன்.” என்றார்.

அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டு குறித்து அதன் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளதாவது: சோலார் பவர் ஒப்பந்தங்களை பெற லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க நீதித் துறை, பங்குச் சந்தை கூறும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. இதை முற்றிலுமாக மறுக்கிறோம்.

குற்றம் நிரூபிக்கப்படும் வரை, பிரதிவாதிகள் நிரபராதிகளாகவே கருதப்படுவார்கள். வெளிப்படைத் தன்மை, தரமான நிர்வாகம், சட்டவிதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்பதில் அதானி குழுமம் எப்போதும் உறுதியுடன் செயல்படுகிறது. நாங்கள் சட்டத்தை மதித்து நடப்பவர்கள். இப்பிரச்சினையை சட்டரீதியாக எதிர்கொள்ள அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, அமெரிக்க நீதிமன்றத்தின் குற்றச்சாட்டை தொடர்ந்து, அதானி குழுமத்துடனான 736 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக கென்யா அறிவித்துள்ளது. நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில், உள்கட்டமைப்புக்கான ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படுவதாக கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ அறிவித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal