2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிடுமா? என்ற எதிர்பார்ப்பில் ரத்தத்தின் ரத்தங்கள் காத்திருக்கிறார்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமி ‘வலுவான கூட்டணி’ அமைத்து ஆட்சியைப் பிடிப்போம் என்கிறார்.
தமிழக அரசியல் கள நிலவரத்தைப் பார்க்கும் போது 2026ல் அ.தி.மு.க. ஆட்சியைப் பிடிப்பது போல் தெரியவில்லை. அதற்கான சிறு துரும்பைக்கூட எடப்பாடி பழனிசாமி இன்றுவரை கிள்ளிப்போடவில்லை என தொடர்ச்சியாக தனது வலைதளப்பக்கத்தில் வேதனையை தெரிவித்து வருகிறார் மருது அழகுராஜ்!
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது ‘வலுவான கூட்டணி அமைப்பேன்’ என்றார் எடப்பாடி பழனிசாமி. ஆனால்,வலுவிழந்த கூட்டணியை அமைத்ததால் போட்டியிடுவதற்கே சீனியர்கள் பின்வாங்கிய நிலையில் புதியவர்களிடம் ‘விட்டமினை’ வாங்கிக்கொண்டு (போட்டியிட்டவர்கள் வாங்கிய கடனுக்கு இன்று வட்டியைக் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்) சீட் கொடுத்தார்.
ஜெயலலிதா, சசிகலா இருக்கும்போது முக்குலத்தோர் வாக்குகள் அப்படியே அ.தி.மு.க.விற்கு விழும். இது பற்றி கலைஞர் கருணாநிதியை வருத்தப்பட்டதுண்டு. ஆனால், இன்று எடப்பாடியின் சமுதாயமான கொங்கு மக்களின் வாக்குகளே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.விற்கு விழாத நிலையில், 2026ல் எப்படி எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆவார் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் மருது அழகுராஜ.
இது தொடர்பாக மருது அழகுராஜ் இன்று தனது வலை தளப்பக்கத்தில், ‘‘அவசர சிகிச்சை’’ என்ற தலைப்பில் ‘‘கவலைக்கிடமாய் இருக்கும் அ.தி.மு.க.விக்கான ஒரே அவசர சிகிச்சை அனைவரும் ஒன்றிணைவது மட்டும்தான்..!
அது கைகூடாது போனால் அ.தி.மு.க., ம.தி.மு.க.வாகும்..! த.வெ.க., அ.தி.மு.க.வாக மாறும்..!’’ என பதிவிட்டிருக்கிறார்!
2026ல் எடப்பாடி பழனிசாமி சுதாரிக்கா விட்டால், அதன் பிறகு அ.தி.மு.க. என்ற மாபெறும் இயக்கம் ம.தி.மு.க.வாக மாறுவதை எந்தவொரு தொண்டனின் மனசாட்சியும் ஏற்றுக்கொள்ளாது…. எடப்பாடியின் மனசாட்சி ஏற்றுக்கொள்ளுமா…?