சுதந்திரமான கொள்கை முடிவுகளை எடுக்கும் இந்தியாவை அச்சுறுத்தி தன் வழிக்கு கொண்டு வரும் நோக்கத்துடன் தான், தொழிலதிபர் அதானி மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய ஊடகம் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி, சூரிய ஒளி மின்சாரம் தொடர்பான திட்டங்களை அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து பெற்றதாகவும், அந்தத் திட்டங்களுக்காக அமெரிக்காவில் முதலீடுகளை திரட்டியதாகவும், அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அதானிக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் திடுக்கிடும் காரணங்கள் உள்ளதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் முடிவுகளை ஏற்காமல் சுதந்திரமான கொள்கை முடிவுகளை எடுக்கும் இந்தியாவை வழிக்கு கொண்டு வருவதற்காக, அந்நாட்டு அரசு அதிகாரிகள் செய்துள்ள திட்டமிட்ட சதி இது என்று ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது. கவுதம் அதானி, ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பல்வேறு மிகப்பெரிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர். அவர் மீது நடவடிக்கை எடுத்தால், இந்திய அரசு வழிக்கு வந்துவிடும் என்ற எண்ணத்தில் இத்தகைய நடவடிக்கையை அமெரிக்காவில் ஆட்சியில் இருக்கும் ஜனநாயக கட்சி அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

சமீபத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றார். அவரது வெற்றிக்கு கவுதம் அதானி எக்ஸ் தளத்தில் வெளிப்படையாக வாழ்த்து தெரிவித்தார். இதுவும் அமெரிக்க ஆளும் கட்சிக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. அதற்கு பழி வாங்கும் நோக்கத்துடன் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், ஸ்புட்னிக் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரிப்பதை தடுக்கவும், உலக அரங்கில் வலிமையான போட்டி குரலாக இந்தியா ஒலிப்பதை முடிவு கட்டவும் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதானி மீது குற்றச்சாட்டு எழுப்பி இந்திய பங்குச் சந்தையை சரியச் செய்வது, அதன் மூலம் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் எல்ஐசி ஆகிய நிறுவனங்களை சீர்குலைப்பதும் அமெரிக்க சதித் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் என்றும் ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தெரியாமல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியிருப்பது, யானை தன் தலையிலேயே மண்ணை வாரி போட்டுக்கொண்டதற்கு சமம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal