கடந்த முறை வழக்கு விசாரணையின் போது தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நேரில் ஆஜராகவில்லை. இன்றைய தினம் நேரில் ஆஜரானதால், கோர்ட் அறை மூடப்பட்டு இருவரிடமும் நீதிபதி விசாரணை நடத்தினார்.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குனர் கஸ்தூரிராஜா இளைய மகன் நடிகர் தனுஷுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சுமார் 18 ஆண்டுகள் திருமண வாழ்வுக்குப் பின்னர், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு இருவரும் ட்விட்டரில் தாங்கள் பிரிந்து விட்டதாக பதிவிட்டனர்.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையே உள்ள பிரச்சினையை தீர்க்க அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்தனர்.

இந்த நிலையில் இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

இந்த மனு முதன்மை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுபாதேவி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் ஆஜராகவில்லை, இதையடுத்து வழக்கின் விசாரணை நவம்பர் 21 ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

இன்றைய தினம் காலை 10.30 மணிக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜரானார், அவரை வழக்கறிஞர் உள்ளே அழைத்துச் சென்றார். இன்றைய தினம் தனுஷும் ஆஜராக வேண்டும் என்பதால் அவர் ஆஜராகிறாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த நிலையில் தனுஷ் ஷூட்டிங்கில் இருந்து வந்து கொண்டிருப்பதால் அவர் ஆஜராக சிறிது நேர அவகாசம் கேட்கப்பட்டது. அதன்படி இந்த வழக்கு பகல் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 11.45 மணிக்கு தனுஷ் தனது காரில் கோர்ட்டுக்கு வந்தார்.

இதையடுத்து அவர் உள்ளே அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் நீதிபதி சுபாதேவியிடம் ஐஸ்வர்யாவும் தனுஷும் ஆஜரானார்கள். இந்த விசாரணையை பார்வையிட யாருக்கும் அனுமதி இல்லை என்பதால் கோர்ட் அறையின் கதவுகள் மூடப்பட்டன.

அந்த மூடப்பட்ட அறையில் இருவரிடமும் நீதிபதி விசாரணை நடத்தினார். எதற்காக பிரிகிறீர்கள், ஏன் சிறிது கால அவகாசத்திற்கு பிறகு சேர்ந்து வாழக் கூடாது என்றெல்லாம் கேட்கப்பட்டது. ஆனாலும் தனுஷும் ஐஸ்வர்யாவும் ‘பிரிகிறோம்’ என இருவரும் உறுதியாக இருந்ததால் இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 27ஆம் தேதி வழங்குவதாக நீதிபதி சுபா தேவி அறிவித்தார்.

எனவே வரும் 27ஆம் தேதி இருவருக்கும் விவாகரத்து கிடைத்துவிடும் என்றே சொல்லப்படுகிறது. காரணம் இருவரும் பரஸ்பரம் பிரிந்து விடுகிறோம் என சொன்னதால் இந்த தீர்ப்பு கிடைக்கும் என்கிறார்கள். ஒருவேளை ஜெயம் ரவி- ஆர்த்தி விவகாரம் போல் ஒருவர் விவாகரத்து கேட்டு மற்றொருவர் சேர்ந்து வாழ விரும்பினால், இந்த வழக்கு விசாரணையில் கால தாமதம் ஏற்பட்டு இருவரையும் சேர்த்து வைக்க முயற்சிகள் நடக்கப்படும். ஆனால் தனுஷ் விவகாரத்தில் இருவருமே பிரிவதில் உறுதியாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal