உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்ட நிலையில், விரைவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
தமிழகத்தில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் மூன்று வழித்தடங்களில் நடந்து வருகின்றன. இதற்கு, 63,246 கோடி ரூபாய் தேவை. மத்திய அரசு தன் பங்களிப்பை மூன்று ஆண்டுகளாக வழங்கவில்லை. இதனால், தமிழக அரசு நிதியில் பணிகள் நடந்து வந்தன.
நிதி பற்றாக்குறை காரண மாக, பணிகள் தாமதமாகும் நிலை ஏற்பட்டது. பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் சந்தித்து பேசினார். மெட்ரோ ரயில் பணிகளுக்கு நிதி வழங்க வலியுறுத்தினார்.
இதையடுத்து, இத்திட்டத்திற்கு 7,425 கோடி ரூபாயை மத்திய அரசின் பங்களிப்பாக வழங்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், 33,593 கோடி ரூபாய் பன்னாட்டு வங்கி கடனுதவியும் பெற்று தரப்படுகிறது. இதன் வாயிலாக, மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கு, 65 சதவீத பங்களிப்பை மத்திய அரசு வழங்குவது உறுதியாகிஉள்ளது. இதனால், தமிழகத்தில் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் குறித்த காலத்திற்குள் முடியும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
இந்நிலையில், துணை முதல்வர் உதயநிதி, டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து, மெட்ரோ ரயில் பணிகளுக்கு நிதி ஒதுக்கியதற்கு நன்றி தெரிவிக்க உள்ளார்.
இதற்காக பிரதமரை சந்திப்பதற்கு நேரம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தீபாவளிக்கு முன் இந்த சந்திப்பு இருக்கலாம் என கூறப்படுகிறது. விளையாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின், கடந்த ஜனவரி மாதம் 4ம் தேதி பிரதமரை உதயநிதி சந்தித்தார். தற்போது துணை முதல்வராக அறிவிக்கப்பட்ட பிறகு பிரதமரை சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, முதல்வர் ஸ்டாலினுக்கு உள்ளது போன்று, துணை முதல்வருக்கும் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களை உருவாக்கும் பணிகள், அரசால் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.