எடப்பாடி பழனிசாமிக்கு வேறு கட்சியினரால் மன உளைச்சல் ஏற்படுகிறதோ இல்லையோ, சொந்தக் கட்சியைச் சேர்ந்த செல்லூர் ராஜூவால் அனுதினமும் மன உளைச்சல்தான்!
மதுரை தெப்பக்குளத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடந்தது. இதில், முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், வளர்மதி ஆகியோர் பங்கேற்றனர். அப்போது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், ‘‘நான் பேசும்போது ஆட்டுக்குட்டி போல தலையை ஆட்ட வேண்டாம். அது லண்டன் போய் விட்டது’’ எனக் கூறினார். அண்ணாமலையை கிண்டல் செய்யும் வகையில் செல்லூர் ராஜூ பேசியதைக் கேட்டு அதிமுக நிர்வாகிகள் வெடித்துச் சிரித்தனர்.
இந்தக் கூட்டத்தில் மட்டுமல்ல, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை தொடர்ச்சியாக கடுமையாக விமர்சித்து வருகிறார் செல்லூர் ராஜூ. ஒவ்வொரு பத்திரிகையாளர் சந்திப்பின்போதும் அண்ணாமலையை சீண்டுவதை வழக்கமாக வைத்துள்ளார் செல்லூர் ராஜூ. இதனால், மதுரை பாஜகவினர் செல்லூர் ராஜூ மீது கோபத்தில் உள்ளனர்.
இந்நிலையில், செல்லூர் ராஜூ செல்லும் இடமெல்லாம் போராட்டம் நடத்த உள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. இது தொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை தரம் தாழ்ந்து விமர்சித்து வருகிறார். அவரை கண்டிக்கிறோம். அண்ணாமலை நேர்மையின் அடையாளம். பிரதமர் நரேந்திர மோடி, வீரத்தின் அடையாளம். சத்ரபதி சிவாஜியை போல் தான் படித்த பட்டங்கள், வகித்த அரசு பதவிகளை நாட்டுக்காக தியாகம் செய்து தமிழக மக்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக அண்ணாமலை பாஜகவில் சேர்ந்தார்.
பாஜகவில் சேர்ந்த 3, 4 ஆண்டுகளில் ஆட்சியில் இருக்கும் திமுகவையும், ஆண்ட அதிமுகவையும் அரசியலில் ஆட்டம் காண வைத்து, தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்து வருகிறார். தேச பக்தி நிறைந்த வாக்காளர்களின் துணிச்சல் மிகுந்த தலைவராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். அண்ணாமலையிடம் செல்லூர் ராஜூ மன்னிப்பு கேட்ட வேண்டும். தவறினால் தகுதி இல்லாமல் ஜெயலலிதாவின் காலில் விழுந்து பதவி பெற்று, பல கோடி ரூபாய் ஊழல் செய்து அரசியல்வாதியாக காட்டி வரும் செல்லூர் ராஜூவுக்கு எதிராக அவர் செல்லும் இடமெல்லாம் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலையை எதிர்க்கிறோம் என்ற பெயரில் சொந்தக் கட்சியினரிடையே செல்வாக்கை இழந்து வரும் செல்லூர் ராஜூவால், எடப்பாடிக்குதான் ‘பி.பி.’ எகிறிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள்.