உதயநிதி ஸ்டாலின் எந்நேரமும் துணை முதல்வராக அறிவிக்கப்படுவார் என்ற நிலையில், அறிவிப்பு ஏன் தாமதமாகி வருகிறது என புதிய தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், உதயநிதி துணை முதல்வர் ஆவது எப்போது? என கேட்டதற்கு, ‘கோரிக்கைகள் வலுக்கிறது… பழுக்கவில்லை…!” என கலைஞர் ஸ்டாலில் பதில் அளித்தார்.

தற்போது தமிழக துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினை நியமிக்க வேண்டும் என்று திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மூத்த அமைச்சர்களுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இதனால் இன்னும் சில நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த நியமனம் தொடர்பான அறிவிப்பு என்பது எப்போது வேண்டுமானாலும் வெளிவரலாம். இதுதொடர்பாக அமைச்சர் தாமோ அன்பரசன், ‘‘இன்னும் 10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவார்” என்று கூறியுள்ளார். இதனால் திமுகவினர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் ஆவதை எதிர்பார்த்து காத்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உள்ளார். கட்சியை பொறுத்தமட்டில் முதல்வர் ஸ்டாலின் வகித்து வந்த திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தான் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதன் பின்னணி தகவல்கள் வெளியாகியிருக்கிறது-. உதயநிதி துணை முதல்வராவதை கனிமொழியின் ஆதரவாளர்கள் துளியும் ரசிக்கவில்லை என்கிறார்கள்.

காரணம், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் மேயர், அமைச்சர், துணை முதலமைச்சர், செயல் தலைவர், முதல்வர் என 40 ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையாக கட்சிக்கு உழைத்தபின்னர் இந்த உயரத்தை அடைந்திருக்கிறார்.

ஆனால், உதயநிதி ஸ்டாலின் தற்போதுதான் சட்டமன்ற உறுப்பினராக தேர்வானர். ஒரு வருடத்தில் அமைச்சராகிவிட்டார். அடுத்த ஒரு வருடத்தில் துணை முதல்வர்… அடுத்து முதல்வர்… என சினிமாவில் ஒரே பாடலில் ஒருவர் எப்படி (சூரியவம்சம் படத்தைப் போல…) கோடீஸ்வரர் ஆகிவிடுவாரோ..? அந்த மாதிரி வெறும் ஐந்து ஆண்டுகளில் முதலமைச்சர் பதவி என்பது ஏற்புடையதா..?

அரசியலில் கனிமொழிக்கு இருக்கும் நெளிவு, சுழிவுகள், அரசியல் அனுபவங்கள்… சிறைவாசம்… என உதயநிதிக்கு இருக்கிறதா? என ஆங்காங்கே மறைமுகமாக கனிமொழி ஆதரவாளர்கள் கேள்வி எழுப்புவது முதல்வரின் காதுகளுக்கு எட்டியிருக்கிறதாம். இந்த நிலையில்தான் துணை முதல்வர் பதவி தாமதமாகி வருகிறது என ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

தவிர, இன்னொரு தகவலும் உலா வருகிறது. அதாவது, உதயநிதி துணை முதல்வரானால் அவருக்கு எப்படிப்பட்ட அதிகாரிகளை நியமிப்பது என்ற ஆலோசனை நடந்து வருகிறதாம். கோட்டையில் அவருக்கான அறையும் தற்போதுதான் ரெடியாகி வருகிறது என்கிறார்கள். எனவே, உதயநிதி துணை முதல்வராக அறிவிப்பு வெளியாகும் வரை, வெளிவரும் தகவல்களுக்கு பஞ்சமிருக்காது என்கிறார்கள்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal