உதயநிதி ஸ்டாலின் இன்று துணை முதலமைச்சராகிறார்… நாளை துணை முதலமைச்சராகிறார் என்று தினம்தோறும் செய்திகள் பரவி வரும் நிலையில், ‘துரைமுருகனை துணை முதலமைச்சர் ஆக்கவேண்டும்’ என மதுரையில் குரல் எழுந்திருக்கிறது.
மதுரை வாடிப்பட்டியில் பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது பேசிய ஆர்.பி.உதயகுமார், ‘‘ ஸ்டாலின் அவர்களே உங்கள் மகன் உதயநிதி ஸ்டாலினை மேடையிலே வைத்துக்கொண்டு மூத்த அமைச்சர்கள் மற்றும் இந்த இயக்கத்திற்காக நாடி நரம்பு ரத்தம் வேர்வையாக சிந்திய அந்த மூத்த தொண்டர்களை எல்லாம் திமுக தொண்டர்களை எல்லாம் கீழே உட்கார வைத்துள்ளீர்கள். எனக்கு மகனாக பிறந்த ஒரே காரணத்திற்காக உதயநிதி ஸ்டாலின் இங்கே உட்காருவார் என்று நீங்கள் மறைமுகமாக ஆணையிட்டு சர்வாதிகாரத்தை கொடி பிடிக்கிறீர்களே.
அண்ணாவின் கொள்கை எங்கே போனது. அண்ணாவின் லட்சியம் எங்கே போனது. சென்ற தேர்தலில் வாக்கு கேட்கும் போது உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்குவோம் என்று சொன்னீர்களா? எதன் அடிப்படையில் இப்போது துணை முதலமைச்சர் ஆக்குவோம் என்று சொல்கிறீர்கள். அதனால் மக்கள் வாய் மூடி மௌனியாக இருக்கிறார்கள். இன்னைக்கு வருவார், நாளைக்கு வருவார், நாளை துணை முதலமைச்சர் ஆக வருவார் என்று சொல்கிறீர்கள் ஆனா வராது. அவர் துணை முதல்வரானால், தக்காளி விலையை குறைத்து விடலாமா?
வெளிநாடு சென்று வந்தது பற்றி ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடுவதற்கு உங்களுக்கு என்ன கஷ்டம்? மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் கேட்கிறார் நீங்கள் வெளிநாடு சென்று வந்திருக்கிறீர்களே, எவ்வளவு முதலீடுகளை கொண்டு வந்திருக்கிறீர்கள்? எவ்வளவு வேலை வாய்ப்பை பெற்று தந்திருக்கிறீர்கள்? அதெல்லாம் கேட்க கூடாது. அதான் சொல்ல முடியாது. அது மரபு கிடையாது என்கிறார் முதலமைச்சர். இருந்தால் தானே சொல்ல முடியும். அமெரிக்க வெளிநாட்டு பயணம் தோல்வி அடைந்த காரணத்தினாலே உதயநிதி ஸ்டாலினை எப்படியாவது துணை முதலமைச்சர் ஆக்க துடிக்கிறார்.
அதிமுகவினுடைய செயல்பாடுகளை முடக்க வேண்டும் என்கிற காரணத்தினாலே, கழகத்தினுடைய மக்கள் பணியை முடக்க வேண்டும் என்கிற காரணத்தினால், அதிமுக மூத்த முன்னோடிகள் மீது அபத்தமான அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பல வழக்குகளை காவல்துறையை ஏவி விடுகிறார். அப்படி இருந்தும் இந்த இயக்கத்தை உங்களால் தடுத்து நிறுத்த முடிந்ததா? காவல்துறை இன்றைக்கு செயல் இழந்து இருக்கிறது. கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. காவல்துறை டிஎஸ்பி தலை முடியை பிடித்து இழுக்கிற வரலாறை நாம் இதுவரை தமிழகத்தில் பார்த்ததே இல்லை. காக்கிச்சட்டை என்று சொன்னால் அதற்கு ஒரு வீர நடை உண்டு. தமிழகத்தில் ஜனநாயகம் என்பது கேள்விக்குறி ஆகிவிட்டது.
சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகிவிட்டது. மக்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகிவிட்டது. இப்போதே இப்படி இருக்கிறது என்று சொன்னால் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர், இல்ல முதலமைச்சராக வந்துட்டா தமிழ்நாட்டுல பாலாறும் தேனாறும் ஓடுன்னு சொல்லுங்க நாங்க ஏத்துக்கிறோம். உண்மையிலேயே நீங்கள் அண்ணாவின் கொள்கைகளை பின்பற்றுகிறவர்களாக இருந்தால் தமிழக அரசின் மூத்த அமைச்சர் துரை முருகன் அவர்களை துணை முதல்வராக்குங்கள்” என்றார்.
தி.மு.க.வின் மூத்த நிர்வாகியும், அமைச்சருமான துரைமுருகன் அ.தி.மு.க. மாஜிக்களுடன் நல்ல நட்புறவில் இருக்கக்கூடியவர். அவரே இப்படி பேசச் சொல்லியிருப்பாரோ? என மதுரை உடன் பிறப்புக்கள் கிசுகிசுக்கிறார்கள்.