‘‘தமிழ் திரைப்பட இயக்குனர், என்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து, செக்ஸ் அடிமையாக வைத்திருந்தார்’’ என, நடிகை பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
மலையாள திரையுலகில், நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கத்தால், பல நடிகையர் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். சில நடிகர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘நீலகுறுக்கன்’, ‘அத்வைதம்’ போன்ற மலையாள படங்களில் நடித்த ஒரு நடிகை தமிழில் ஓரிரு படங்களில் மட்டுமே நடித்த பின் சினிமாவை விட்டே விலகி விட்டார்.
இந்நிலையில், வெளிநாட்டில் வசிக்கும் அவர் அளித்துள்ள பேட்டியில், ‘‘ எனக்கு அப்போது, 18 வயது. தமிழ் இயக்குனர் ஒருவர், அவரது மனைவியுடன் வந்து, என் அப்பாவிடம் பேசி சினிமாவில் நடிக்க வைப்பதாக அழைத்து சென்றார். படத்தில் நடிக்கும் போது, அந்த இயக்குனரின் கட்டுப்பாட்டில் தான் இருந்தேன்.
ஒரு நாள் இயக்குனரின் மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில், என்னை மகள் போன்று நினைப்பதாக கூறி முத்தமிட்டார். அப்போதே, எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. என்னுடன் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
பின், அவரால் நான் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன். ஓராண்டு காலம் அந்த இயக்குனரின் செக்ஸ் அடிமையாக இருந்தேன். பயத்தால் இதை அப்போது என்னால் கூற முடியவில்லை. இந்த அவமான உணர்வில் இருந்து வெளியே வர எனக்கு, 30 ஆண்டுகளாது’’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆனால், அந்த இயக்குனர் யார் என்ற விபரத்தை அவர் தெரிவிக்கவில்லை. போலீசாரின் விசாரணையில், அவர் பற்றிய விபரத்தை தெரிவித்துள்ளதாக, அவர் கூறியுள்ளார். அவரது பேட்டி மலையாள மற்றும் தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.