‘‘நடிகைகள் புகார் கொடுத்து அதற்கு நடவடிக்கை எடுக்கும் நிலைமையில் தமிழ் சினிமா சங்கங்கள் இருக்கிறதா?’’ என்று நடிகை ரேகா நாயர் கேள்வி எழுப்பி உள்ளார்.
மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் சீண்டல்களை ஹேமா கமிட்டி அறிக்கை தோலுரித்துக் காட்டிய நிலையில், அதுபற்றி நடிகை ரேகா நாயர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: ‘‘சினிமா தோன்றி காலத்தில் இருந்தே பாலியல் சீண்டல்கள் இருக்கிறது. அந்த காலகட்டத்தில் ஊடக வளர்ச்சி இல்லாததால் அதை அட்ஜஸ்ட் பண்ணி இந்த திரையுலகில் இருந்தவர்கள் ஏராளம். அதே நேரத்தில் அந்த அட்ஜஸ்மெண்டுக்கு ஒத்துப்போகாமல் சினிமாவை விட்டே வெளியேறியவர்களும் நிறைய பேர் உள்ளனர்.
தமிழ் சினிமாவில் இதுபோன்ற பாலியல் சீண்டல்கள் நடக்கிறதா என்கிற கேள்விக்கு பதிலளித்த ரேகா நாயர், ஒன்றா இரண்டா நிறைய இருக்கு. லட்சக்கணக்கானது இருக்கு. நான் குரல் கொடுத்தா எனக்கு இங்க சினிமால வாய்ப்பு கிடையாது. அதனாலேயே பல நடிகைகள் குரல் கொடுப்பதில்லை. மலையாளத்திலாவது 10, 20 விக்கெட்டு தான் விழுது. இங்க தமிழ் சினிமால லிஸ்ட் எடுத்து பார்த்தால் 500, 600 விக்கெட் விழும்.
இங்கு திறமையாளர்களை மதிப்பதில்லை. நல்லா நடிக்க, டான்ஸ் ஆட தெரிந்தவர்களை காட்டிலும் யார் சொல்பேச்சை கேட்பார்களோ அவர்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்கிறார்கள். இப்போ ஒரு நடிகை குரல் கொடுத்தால், மற்ற ஆண் நடிகர்களின் மிரட்டல்களுக்கு ஆளான பெண்கள் இங்கு அதிகளவில் இருக்கிறார். பல நடிகைகள் வீடு உடைக்கப்பட்டிருக்கு. மலையாளத்தில் உச்சத்தில் இருந்த நடிகை இந்த ஊரைவிட்டே ஓடும் அளவுக்கு இங்கு பிரச்சனை செய்திருக்கிறார்கள்.
புகார் கொடுத்து அதற்கு நடவடிக்கை எடுக்கும் நிலைமையில் தமிழ் சினிமா சங்கங்கள் இருக்கிறதா என்று கேட்டால் அது கேள்விக்குறி தான். ஆஃபிஸ் போனா ஆளே இருக்க மாட்டாங்க. விஷால் செருப்பால அடிங்கனு சொல்லிருக்காரு, ஆனா அவரு சொல்றதுக்கு முன்னாடியே நான் அடிச்சுட்டேன். அடிச்சவங்கள நீங்க எப்படி சித்தரிச்சிங்க, அடிவாங்குனவங்கள நீங்க எங்கபோய் வச்சிருக்கீங்க. அவருடைய பதவியை பறித்தீர்களா?’’ என ரேகா நாயர் சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘‘2014ம் ஆண்டே ஒரு ரியாலிட்டி ஷோ முடிந்து பல பெண்களை மேனேஜர்கள் அழைத்து சென்றார்கள். அதை நான் அந்த ஷோவிலேயே ஓப்பனாக கூறினேன். அது நடந்து 10 வருஷம் ஆச்சு இப்பயும் அதையே தான் பேசுகிறோம். மலையாளத்தில் மட்டுமல்ல அனைத்து மொழி சினிமாவிலும் இதுபோன்ற பாலியல் அத்துமீறல்கள் இருந்துகொண்டே தான் இருக்கின்றன’’ என அவர் கூறி இருக்கிறார்.