நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய காதல் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்துவிட்டதாக அறிக்கை மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மனைவி ஆர்த்தியை கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நடிகர் ஜெயம் ரவிக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். இந்த நிலையில், மனைவி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த ஜெயம் ரவி, தற்போது தன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்து பிரிந்து உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், ‘‘வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம், ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும், திரையல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும், திரை துறை நண்பர்கள், பத்திரிக்கை, ஊடக துறை மற்றும் சமுக ஊடக நண்பர்கள், என் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன். எனவே, மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.

நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது.

இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த முடிவு எனது சொந்த முடிவாகும். இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் வேண்டிக்கொள்கிறேன். என்னுடைய முன்னுரிமை எப்போதும் எனது நடிப்பின் மூலம் எனது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு அளிக்க வேண்டும் என்பதே.

நான் என்றும், எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன், நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை நன்றியுடன் உணர்கிறேன், எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி” என ஜெயம் ரவி குறிப்பிட்டுள்ளார்.

ஜெயம் ரவி – ஆர்த்தி ஜோடியின் இந்த முடிவு திரையுலகினர் மத்தியிலும் அவரது குடும்பத்தினர் மத்தியிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal